யாழ் மாவட்டத்தில் கொரோனா தொற்று ஏற்பட்டால் பாரிய பாதிப்பு ஏற்படும்! வைத்தியர்கள் எச்சரிக்கை

யாழ். மாவட்டத்தில் கொரோனா தொற்று ஏற்பட்டால் பாரிய விளைவுகளை ஏற்படுத்தும் என வைத்தியர்கள் கூட்டாக எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

இங்குள்ள மக்கள் பொறுப்பற்ற வகையில் அலட்சியமாக செயற்படுகின்றனர். திருவிழாக்கள், கோவில்கள், தேவாலயங்கள், பொது இடங்களில் சுதந்திரமாக நடமாடுகிறாா்கள் அது மிக ஆபத்தான விளைவுகளை உண்டாக்கும்.

யாழ்ப்பாணத்தில் கொரோனா பரவாது என்பதுதற்கு எந்தவொரு உத்தரவாதமும் கிடையாது. பரவும் என்பதற்கு 100 வீத சாத்தியங்கள் உள்ளன.

இங்கு கொரோனா தொற்று ஏற்பட்டால் இத்தாலியை போன்று பாரிய பாதிப்புகள் ஏற்படும் என இலங்கை வைத்திய அதிகாாிகள் சங்கத்தின் வடமாகாண உறுப்பினா்களான வைத்தியர்கள் எச்சாிக்கை விடுத்துள்ளனா்.

யாழ்ப்பாணத்தில் எந்த கொரோனா நோயாளியும் இதுவரை இனம் காணப்படவில்லை. பலாலி விமான நிலையம் மூலம் எமது மண்ணிற்கு 60க்கும் மேற்பட்ட வெளிநாட்டவர்கள் வந்திறங்கி பல்வேறு இடங்களுக்கும் சென்று வந்துள்ளார்கள். அவர்கள் எவருமே கண்காணிக்கப்படவில்லை. அவர்களின் வீட்டு விலாசங்கள் அவர்கள் தொடர்பான தகவல்களை யாழ்ப்பாணத்தில் உள்ள 14 சுகாதார மருத்துவ அதிகாரிகள் சேகரித்து அவர்களை கண்காணித்து அவர்களுக்கு கோரோனோ உள்ளதா? என பரிசோதிக்கும் நடவடிக்கைளில் ஈடுபட்டுள்ளனர்.

கொரொனோ தொற்றானது ஒரு நோய் தொற்று உள்ளவரிடம் இருந்து மற்றவர்களுக்கு தொற்றும். நோயாளியின் நீர் துளிகள் மூலமே அவை பரவுகின்றது. எனவே நாம் நோயில் இருந்து தப்புவதற்கு முதலில் செய்ய வேண்டியது, தேவையற்று வெளியில் நடமாடாமல்

மக்கள் வீட்டிலையே இருப்பதே சிறந்தது. அதற்காகவே அரசு விடுமுறையை விடுத்துள்ளது.ஆனால் யாழ்ப்பாணத்தை பார்க்கும்போது நோய்க்காக அரசு விட்ட விடுமுறையை பொருள்கள் கொள்வனவு செய்வதற்காக விடுக்கப்பட்ட விடுமுறைபோல

பலரும் பொருள்களை கொள்வனவு செய்வதில் ஆர்வம் காட்டி வருகின்றார்கள். அத்தியாவசிய பொருள்களை கொள்வனவு செய்வதை விடினும் புடவைக்கடை , நகைக்கடை என்பவற்றிலும் மக்கள் கூட்டமாக பொருள்களை கொள்வனவு செய்வதில் உள்ளார்கள்.

இந்த நோய் தொற்றில் இருந்து எம்மை பாதுகாக்க முடிந்த வரையில் மக்கள் கூட்டமாக உள்ள இடங்களுக்கு செல்லாது தவிர்ப்பதே சிறந்தது. அத்தியாவசிய பொருள்களை கொள்வனவு செய்வதாயின் வீட்டில் உள்ள ஒருவர் மாத்திரம் சென்று அவற்றை கொள்வனவு செய்யவும்.

திருமண வீடு , பிறந்தநாள் கொண்டாட்டம் என்பவற்றில் கலந்து கொள்வதனையும் தவிர்த்து கொள்வது சிறந்தது.நோய் தொற்று உள்ளதாக சந்தேகிப்போர் வீட்டில் தனிமைப்பட்டு இருங்கள்

வெளிநாடுகளில் இருந்து வந்தவர்கள் நிச்சயமாக வீடுகளில் தனிமைப்பட்டு இருக்க வேண்டும். நோய் தொற்று ஏற்பட்டு 14 நாள்களின் பின்னரே அதற்கான அறிகுறிகள் தென்படும். எனவே 14 நாள்கள் கட்டாயம் தனிமைப்பட்டு இருக்க வேண்டும்.

நோய்க்கான அறிகுறிகள் காணப்பட்டால் சுகாதார பரிசோதகருக்கு அறிவித்து அவர் மூலம் சுகாதார வைத்திய அதிகாரிக்கு தெரியப்படுத்தி அவர் ஊடாகவே வைத்தியசாலைக்கு செல்வது சிறந்தது.

வீட்டில நோய் தொற்று உள்ளவர் என சந்தேகப்படுபவர் தானே தனிமைப்பட்டு இருப்பது மட்டுமின்றி அவர் உபயோகிக்கும் பொருள்களை அவரே சுத்தம் செய்ய வேண்டும். அதேவேளை வீட்டிற்கு வெளியே சென்று வருவோர் வீட்டிற்குள் போக முன்னர் முழங்கை வரையிலும் முழங்கால் வரையிலும் முகத்தையும் நன்றாக கழிவி விட்டு செல்ல வேண்டும். அதேபோன்று அலுவலகத்திற்கு செல்வோரும் இதனை கருத்தில் கொள்ள வேண்டும் என வைத்தியர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.