கொரோனா எதிரொலி- பங்குனித் திங்கள் உற்சவத்தை நிறுத்த தீர்மானம் !

தென்மராட்சிப் பிரதேச செயலர் பிரிவுக்கு உட்பட்ட ஆலயங்களில் இரு வாரங்களுக்கு பங்குனித் திங்கள் உற்சவத்தை நிறுத்தி வைப்பதற்கு தென்மராட்சிப் பிரதேச செயலகம், சாவகச்சேரி சுகாதாரப் பிரிவு மற்றும் பொலிஸார் இணைந்து தீர்மானம் எடுத்துள்ளனர்.

நாட்டில் கொரோனா வைரஸ் பரவலடைந்து வரும் நிலையில் தற்போது அம்மன் ஆலயங்களில் இடம்பெற்று வருகின்ற பங்குனித் திங்கள் உற்சவம் காரணமாக நோயின் தாக்கம் பரவலடையக்கூடும் என்ற அச்சத்தில் இந்த முடிவு எட்டப்பட்டுள்ளது.

தென்மராட்சி பிரதேச செயலகத்தில் நேற்று பிரதேச செயலர் தலைமையில் இடம்பெற்ற கலந்துரையாடலின் போதே இம் முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

ஆலயங்களில் பொங்கல் நிகழ்வு, அன்னதானம் ஆகியன செயற்பாடுகள் தடை செய்யப்பட்டிருக்கும், அதே வேளையில் பொதுமக்கள் கூட்டம் கூடாமல் குறுகிய நேரத்திற்குள் வழிபாட்டை மேற்கொண்டு விட்டு வீடு திரும்ப முடியும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன் இவற்றை கண்காணிக்க ஆலயங்களில் பொலிஸார் மற்றும் இராணுவத்தினர் கடமையில் இருப்பார்கள் எனவும் கூறப்பட்டுள்ளது.

குறித்த கலந்துரையாடலில் தென்மராட்சியில் பிரசித்திபெற்ற அம்மன் ஆலயங்களான பன்றித் தலைச்சி அம்மன், சோலை அம்மன் மற்றும் சிட்டிவேரம் கண்ணகை அம்மன் ஆலய நிர்வாகத்தினரும் கலந்துகொண்டு இம் முடிவிற்கு இணங்கி இருப்பதாகத் தெரிவித்துள்ளனர்.

மேலும் வீடுகளில் நடத்தத் தீர்மானித்துள்ள நிகழ்வுகள் அனைத்தையும் இரு வார காலத்திற்கு ஒத்தி வைக்கவும் இதன்போது முடிவெடுக்கப்பட்டுள்ளது.

எனினும் கொரோனா வைரஸ் தாக்கம் தொடருமானால் இந் நிலை இரு கிழமைக்கு மேலாக நீடிக்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை பங்குனித் திங்கள் உற்சவம் கடந்த திங்கட்கிழமை ஆரம்பமாகி தொடர்ந்து நான்கு திங்கட்கிழமைகள் இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.