இந்த தேர்தலில் ஜெயிக்கப் போவது யார்? தேர்தல் கணிப்பீடுகள்! ஒரு அலசல்

இலங்கைத் தீவு அரசியலில் ஒரு ஸ்திரதன்மையற்ற நிலையில் ஒரு பெரிய அழுத்தம் காரணமாகவும், தேர்தல் ஆணையத்தின் நெருக்குதல் காரணமாகவும் நாளை மறுதினம் பெரும் எதிர்பார்ப்புக்களைக் கொண்ட உள்ளூராட்சித் தேர்தலை நாடு சந்திக்கவுள்ளது.

கூட்டரசாங்கம் என்று சொன்னாலும் அதிபர் மைத்திரிக்கும், பிரதமர் ரணிலுக்குமிடையில் கடந்த வருடமாக ஒரு பனிப்போர் நடந்து கொண்டுதான் வருகின்றது.

ஒரு புதிய தேர்தல் முறையில் மக்கள் முதன் முதலாக வாக்களிக்கவுள்ளார்கள். 60 வீதம் வட்டார முறையிலும், 40 வீதம் விகிதாசார முறையிலும் இந்த வாக்களிப்பு நடைபெறவுள்ளது. அத்துடன், 25 வீதம் கொண்ட பெண்கள் பங்களிப்பும் உள்ளடக்கப்பட்டுள்ளது.

இந்த தேர்தலுக்கு முன்னர் மஹிந்தவும், அதிபர் மைத்திரியும் இணைந்து கொள்வதற்கு ஒரு பெரிய வாய்ப்பு உருவானது.

ஆனால் இந்த இருவரும் இணைந்து கொண்டால் தனது தலைமையில் 10 பேர் கொண்ட அணியொன்றை ஐ.தே.க பக்கம் கொண்டு செல்வேன் என்று சுதந்திரக் கட்சியின் பொதுச் செயலாளரும், விவசாய அமைச்சருமான துமிந்த திஸ்ஸநாயக்க பயம் காட்டிக் கொண்டிருந்தார்.

இந்த புகைச்சலுக்கு நன்றாக ரணில் தரப்பு உரம் போட்டுக் கொண்டிருந்தது. மறு புறம் மஹிந்த அணி பிரதமர் பதவி தங்களுக்கு வேண்டும் என்று அதிபர் மைத்திரியிடம் கோரிக்கை விட்டுக் கொண்டிருந்தது இந்த நிலையில்தான் இந்த குட்டித் தேர்தல் வாக்களிப்பு நடைபெறவுள்ளது.

தேர்தல் கணிப்பீடுகள் முன்னாள் அதிபர் மஹிந்த அணி, அதிபர் மைத்திரி அணி, பிரதமர் ரணில் விக்ரமசிங்க ஆகியவர்களைக் கொண்ட 3கட்சிகள் பலமான போட்டியில் உள்ளன.

அதனால் நாம் எமது தேர்தல் கணிப்பீடுகளை நாட்டிலுள்ள 341 மொத்த சபைகளில் இருந்து மட்டுமே செய்துள்ளோம். நாம் எங்குமே பிரதேச ரீதியாக கணிப்பீடுகள் செய்யவில்லை. கிழக்கு மாகாணத்தை ஒரு சிறிய அலசல் செய்துள்ளோம்.

இந்த 3கட்சிகளும் 280 – 285 சபைகளைக் கைப்பற்றலாம். மிகுதியான 56 – 56 சபைகளை கிழக்கில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு மற்றும் ஜே.வி.பி மற்றும் இதர சிறிய கட்சிகள் கைப்பற்றுகின்றன.

இதுவொரு குட்டித் தேர்தல் என்பதால் நாம் பெரிதாக ஆய்வு செய்யக் கூடிய நிலை இல்லை என்பதையும் அறிந்து கொள்ளவும். இருந்தாலும் நாம் 3கட்சிகளையும் தனித்தனியாக தந்துள்ளோம்.

ஐக்கிய தேசிய கட்சி

ஐ.தே.க. யைப் பொறுத்த மட்டில் நாட்டிலுள்ள 341 சபைகளில் 276 சபைகளை வெற்றி பெறும் என்று ஊடக வாயிலாக ஒரு பிம்மத்தை ஐ.தே.க. கசிய விட்டுள்ளது.

இதற்குத் துணையாக ஐ.தே.க. சார்பான படையினர் முற்றாக ஈடுபட்டனர். ஐக்கிய தேசியக் கட்சி சார்பான படைத் தரப்பு ஒரு ரகசிய ஆய்வு செய்துள்ளதாக ஒரு வதந்தியை எடுத்து விட்டுள்ளது.

இப்படியான வெற்றியொன்று ஐ.தே.கக்கு இல்லை. ஆனால் 3 கட்சிகளிலும் முன்னணி வெற்றியாக ஐ.தே.க. அளிக்கப்படும் மொத்த வாக்குகளில் 33 – 36 வீதமான வெற்றியை பெறக் கூடிய நிலையுள்ளது. இந்த வகையில் ஐ.தே.க. 123 -128 ஆசனங்களை கைப்பற்றலாம்.

மஹிந்த அணி

மஹிந்த அணி என்பது அளிக்கப்படும் மொத்த வாக்குகளில் சுமார் 28 – 30 வீதமான வெற்றியைப் பெறலாம். இந்த வகையில் சுமார் 80 – 82 ஆசனங்களை நாடு முமுவதும் இருந்து பெறலாம்.

இலங்கைப் படையினர் மற்றும் அவர்களின் குடும்பம் என்று மஹிந்த அணிக்கு 80 வீதமான ஆதரவு கிடைக்கவுள்ளது. அநுராதபுரம், திருகோணமலை, மட்டக்களப்பு, அம்பாறை, காலி, மொனராகலை, மற்றும் வடக்கு, கிழக்கு எல்லைப்புற சிங்கள மக்களின் ஆதரவுகள் மஹிந்த அணிக்கே கிடைக்கவுள்ளது.

காரணம் இன்னும் எல்லைப்புற சிங்கள ஊர்காவல் படையினரும் அவர்களின் குடும்பமும் இன்னும் மஹிந்த ஆதரவு கொண்ட மக்களாகவே உள்ளனர்.

அதிபர் மைத்திரியின் சுதந்திரக் கட்சி

மஹிந்தவும், அதிபர் மைத்திரியும் பிரிந்து நிற்பதால் சுதந்திரக் கட்சி இரண்டு பிரிவுகளாகவும் இரண்டு பங்குகளாகவும் வாக்குகள் பிரிகின்றது. அதனால் சுதந்திரக் கட்சி இந்த தேர்தலில் மூன்றாம் இடத்திற்கு தள்ளப்பட்டு விட்டது.

சுதந்திரக் கட்சி சுமார் 70 – 75 இடங்களை வெல்லக் கூடிய நிலையுள்ளது. இந்த வெற்றி என்பது அளிக்கப்படும் மொத்த வாக்குகளில் சுமார் 25 – 28 வீதமாக இருக்கும்.

நாட்டில் ஐ.தே.க. க்கு ஆதரவுகள் அதிகரிக்கவில்லை. மஹிந்தவின் ஆதரவு சற்றுக் குறைந்துள்ளது. மைத்திரிக்கு என்று தனியான ஆதரவு தளம் ஒன்று இல்லை. இருந்தாலும் படித்த மக்களின் ஒட்டு மொத்த ஆதரவு மைத்திரிக்கு அதிகரித்துள்ளது.

9 வீதம் ஏனைய கட்சிகள்

9வீதமான வெற்றியை தமிழ்க் கூட்டமைப்பு ஜே.வி.பி. கிழக்கில் அமைச்சர் ரிசாத்தின் மயில் சின்னம் மற்றும் திருகோணமலை மற்றும் வடக்கில் போட்டியிடும் ஹக்கீம் கட்சியின் மரச்சின்னம் ஆகியன அடங்குகின்றது.

தமிழ்க் கூட்டமைப்பு வடக்கு, கிழக்கு

தமிழ் தேசியக் கூட்டமைப்பை பொறுத்த மட்டில் வடக்கு கிழக்கிலுள்ள 79 கபைகளில் 46-49 சபைகளை கைப்பற்றுகின்றது. வடக்கு, கிழக்கில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை எதிர்த்துக் களமிறங்கியுள்ளவர்களால் சுமார் 3 – 5 வீதமான வாக்குகளை பிடுங்கி எடுத்தாலும் எங்குமே ஒரு சபையையாவது அவர்களால் வெற்றி பெற முடியாது. 3 வீதமான வாக்குச் சரிவை கூட்டமைப்பு சந்திக்கின்றது.

கிழக்கில் அமைச்சர் ரிசாத்தின் மயில்

கடந்த பொதுத் தேர்தலில் அப்பாறை மாவட்டத்தில் அமைச்சர் ரிசாத்தின் மயில் சின்னக் கட்சி சுமார் 33 ஆயிரம் வாக்குகளைப் பெற்றிருந்தது. இப்போது மயிலுக்கான ஆதரவு சுமார் 2 – 3 ஆயிரம் அதிகரித்துள்ளது.

ஆனாலும் மயில் அம்பாறையில் எங்குமே ஒரு சபையாவது வெற்றி பெறக் கூடிய நிலையில் இல்லை. திருகோணமலை, மட்டக்களப்பு ஆகிய மாவட்டங்களில் மயில் சின்னம் ஆங்காங்கு ஆசனங்களை வெல்லக் கூடிய நிலையுள்ளது.

ஓட்டமாவடி, வாழைச்சேனை ஆகிய பகுதிகளை இலக்கு வைத்து கோரளைப்பற்று சபையை அமைச்சர் அமீர் அலியின் முயற்சியால் வெற்றி பெற வாய்ப்புள்ளது.

ஹக்கீமின் மரக் கட்சி

ஹக்கீம் அம்பாறையில் பாரிய பின்னடைவை கண்டுள்ளார். அக்கரைப்பற்று தவிர்ந்த அம்பாறை கரையோரத்தை ஹக்கீம் வெற்றி பெற்றாலும் சகல சபைகளிலும் மயில் மற்றும் ஏனைய கட்சிகள் குறைந்தது ஒவ்வொரு ஆசனத்தையாவது பிடிக்கின்றது.

இந்த தாக்கமானது எதிர்வரும் மாகாணத் தேர்தலில் மயில் சின்னம் ஹக்கீம் கட்சியின் மாகாண சபை உறுப்பினரை வெற்றி பெறும். கல்முனை மாநகரம் பலத்த போட்டியை கொண்டு வந்துள்ளது.

கல்முனை சபையில் சாய்ந்தமருது பள்ளிவாசல் சுயேட்சைக் குழுவும், மயில் சின்னமும் இணைந்து பலமான எதிர் கட்சியாக வரும் நிலையுள்ளது.

ஹக்கீமின் மரக்கட்சி கல்முனை சபையை மிகக் குறைந்த வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெறக் கூடிய நிலையுள்ளது.

காரணம் மருதமுனை மற்றும் நாற்ப்பெட்டிமுனை ஆகிய பகுதிகிளில் கட்சிக்கு 60 வீதமான ஆதரவு உள்ளது. அதனால் இந்த வெற்றியை இந்த ஊர்கள் தீர்மானிக்கின்றது.

அமைச்சர் ஹிஸ்புல்லா

அமைச்சர் ஹிஸ்புல்லா காத்தான்குடி சபையை சுதந்திரக் கட்சி சார்பாக வெற்றி பெறுகின்றார். அமைச்சர் ஹிஸ்புல்லாவை எதிர்த்து றஹ்மான் மற்றும் ஹக்கீம் கட்சி பலமாகவே களமிறங்கியுள்ளது.

ஆனாலும் மீண்டும் காத்தான்குடி சபையை ஹிஸ்புல்லா கைப்பற்றுகின்றார். றஹ்மான் இன்னும் காத்தான்குடியை வெற்றி பெறும் நிலையில்லை. ஆனாலும் இரண்டு உறுப்பினர்களை வெற்றி பெறலாம்.

முன்னாள் அமைச்சர் அதாவுல்லாவின் குதிரைக் கட்சி

முன்னாள் அமைச்சர் அதாவுல்லாவின் குதிரைக் கட்சி அக்கரைப்பற்று மாநகரத்தைக் கைப்பற்றும் அட்டாளைச்சேனை பிரதேசத்தில் 2 – 3 ஆசனங்களைக் கைப்பற்றும் வேறு மாற்றம் நடக்க வாய்ப்பில்லை.

இந்த தேர்தலில் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தேர்தல் வெற்றி என்பதை விட மஹிந்த அதிபர் மைத்திரியை பிரித்து இருதுருவங்களாக தேர்தலில் குதிக்க வைத்ததில் வெற்றி பெற்றுள்ளார்.

ஆனாலும் இந்த தேர்தலின் பின்பு மஹிந்தவும், அதிபர் மைத்திரியும் இணைந்து கொள்ளக் கூடிய நிலையைக் கொண்டு வரும் தவிர்க்க முடியாத காரணங்களால் இருவரும் இணைந்து சுதந்திரக் கட்சி ஆட்சி அமையலாம்.

இந்த கட்டுரை ஒரு பொது எழுத்தாளர் M.M.Nilamdeen அவர்களால் வழங்கப்பட்டு 10 Feb 2018 எமது செய்திப்பிரிவால் பிரசுரிக்கப்பட்டது. இந்த கட்டுரையின் எந்தவொரு தயாரிப்பிலும்  யாழ்தீபம் செய்திப்பிரிவு பங்கேற்கவில்லை.