உயிர் பிரியும் முன் இறுதியாக அளிக்கப்பட்ட டீ? ஏழு ஆண்டுகள் இழுபறிக்குப் பின் நிறைவேறா ஆசையுடன் தூக்கிலிடப்பட்ட நிர்பயா குற்றவாளிகள்

டெல்லி நிர்பயா பாலியல் வல்லுறவு வழக்கின் குற்றவாளிகள் நால்வரும் இன்று காலை தூக்கிலிடப்பட்ட நிலையில், குடும்பத்தினரை சந்திக்க வேண்டும் என்ற அவர்களின் கடைசி ஆசையும் நிறைவேற்றப்படவில்லை.

ஏழு ஆண்டுகளாக நடைபெற்ற நீண்ட சட்ட இழுபறிக்குப் பின்னர் இன்று அதிகாலை காலை 5.30 மணிக்கு 4 பேரும் தூக்கிலிடப்பட்டனர்.

6 மணியளவில் நால்வரும் உயிரிழந்ததாக திஹார் சிறை நிர்வாகம் அறிவித்தது.

தண்டனை நிறைவேற்றப்படுவதற்கு முன்னதாக குற்றவாளிகளுக்கு இறுதியாக அளிக்கப்பட்ட டீ மற்றும் தண்ணீரை அவர்கள் ஏற்கவில்லை.

தங்களது குடும்பத்தினரை சந்திக்க வேண்டும் என்ற அவர்களின் கடைசி ஆசையும் நிறைவேற்றப்படவில்லை.

இந்நிலையில், நிர்பயா குற்றவாளிகள் தூக்கிலிடப்பட்டது குறித்து பலரும் மகிழ்ச்சியை வெளியிட்டு வருகின்றனர்.

7 ஆண்டுகளுக்கு முன்பு நடந்தது என்ன?
2012-ம் ஆண்டு, 23 வயதான பிசியோதெரபி மாணவி, திரைப்படம் பார்த்துவிட்டு தனது ஆண் நண்பருடன், பேருந்தில் வீட்டிற்கு திரும்பிக் கொண்டிருந்தபோது கூட்டு பாலியல் வன்புணர்வு செய்யப்பட்டார். அவருடைய நண்பரும் கொடூரமாக தாக்கப்பட்டார். பிறகு இருவரும் பேருந்தில் இருந்து சாலையோரத்தில் வீசி எறியப்பட்டனர்.

  • 2012 டிசம்பர் 29- சிங்கப்பூர் மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்றுவந்த நிர்பயா உயிரிழந்தார்.
  • 2013 மார்ச் 11- முக்கிய குற்றவாளியும், பேருந்து ஓட்டுநருமான ராம் சிங் என்பவர் மார்ச் 2013இல் திகார் சிறையில் இருந்தபோது தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார்.
  • 2013 ஆகஸ்டு 31- வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட 17 வயது சிறுவனின் குற்றத்தை உறுதி செய்த சிறார் நீதி வாரியம், அந்தச் சிறுவனை, சிறுவர்களுக்கான சீர்திருத்த மையத்தில் மூன்று ஆண்டு காலம் வைத்திருக்கவேண்டும் என தீர்ப்பளித்தது.
  • 2013 செப்டம்பர் 13 -இந்த வழக்கில் பிற நான்கு குற்றவாளிகளுக்கும் மரண தண்டனை விதிக்கப்பட்டது.
    2014 மார்ச் 13- நால்வரின் மரண தண்டனையை தில்லி உயர் நீதிமன்றம் உறுதி செய்தது.
  • 2014 மே-ஜூன்- குற்றம் சாட்டப்பவர்கள் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனுக்களை தாக்கல் செய்ததால், அதை பரிசீலித்து தீர்ப்பு வழங்கும்வரை மரண தண்டனை நிறுத்தி வைக்கப்படும் என உச்ச நீதிமன்றம் கூறியது.
  • 2017 மே- தில்லி உயர் நீதிமன்றம் மற்றும் விசாரணை நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பை உச்ச நீதிமன்றம் உறுதி செய்தது.
  • 2020 மார்ச் 20 – அதாவது இன்று குற்றவாளிகள் தூக்கில் இடப்பட்டது.