கொரோனாவுக்கு பயந்து ஆபத்தான மருந்துகளை பயன்படுத்த வேண்டாம்! உயிர் போகும் அபாயம் என எச்சரிக்கை

புதிய கொரோன வைரஸ் தொற்றிற்கு இதுவரையில் உத்தியோகபூர்வமாக சிகிச்சை ஒன்று கண்டுபிடிக்கப்படவில்லை என இலங்கை வைத்தியர்கள் தெரிவித்துள்ளனர்.

எனினும் சில சமூகவலைத்தளங்களில் சில மருந்துகளை உட்கொண்டால் கொரோனா வைரஸ் பரவாது என குறிப்பிடப்படுகின்றது.

இதனால் இந் நாட்டில் சிலர் தங்களுக்கு கொரோனா வைரஸ் தொற்றிற்கான ஆரம்ப அறிகுறிகள் தென்படும் சந்தர்ப்பங்களில் அவ்வாறான மருந்துகளை பெற்றுக்கொள்வதற்கு முயற்சிப்பதாக தெரியவந்துள்ளது.

எனினும் இதுவரையில் கொரோனாவுக்கு உரிய மருந்து ஒன்று கண்டுபிடிக்கவில்லை என்பதனால் இவ்வாறான முயற்சிகளில் ஈடுபட்டால் உயிரை இழக்க நேரிடும் என வைத்தியர்கள் தெரிவித்துள்ளனர்.

அனைத்து மருந்துகளையும் அனைவரும் பயன்படுத்துவதற்கு வாய்ப்புகள் இல்லை என்பதனால் கொரோனா அறிகுறிகள் காணப்பட்டால் அருகில் உள்ள வைத்தியசாலைக்கு செல்வது முக்கியம் என வைத்தியர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

மலேரியா மருந்துகளை கொரோனாவுக்கு பயன்படுத்தலாம் என அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் கூறியதனை தொடர்ந்து அதற்கான கோரிக்கை அதிகரித்துள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.

எனினும் வைத்திய ஆலோசனை இன்றி ஆபத்தான மருந்துகளை பெற்றுக் கொள்ள வேண்டாம் என வைத்தியர்கள் கேட்டுக்கொண்டுள்ளனர்.