சுவிஸிலிருந்து யாழ்ப்பாணம் வந்த மதபோதகருக்கு கொரோனா உறுதி! தற்போது வெளியான தகவல்

யாழ்ப்பாணம்- செம்மணி பிலதெனியா தேவாலயத்தில் ஆராதனைக்காக சுவிஸ் நாட்டிலிருந்து வருகைதந்த மதபோதகா் கொரோனா நோயாளி என உறுதிப்படுத்தப்பட்டிருக்கின்றது.

இந்தத் தகவலை அவரது உதவிப் போதகர் யோசுவா ராஜாநேசன் உறுதிப்படுத்தியுள்ளார் என முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினா் அங்கஜன் இராமநாதன் தெரிவித்துள்ளார்.,

யாழ்ப்பாணத்தில் போதகர் பங்கேற்ற நிகழ்வுகளில் பங்கேற்ற அனைவரையும் தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தி கொரோனா தொற்றை கட்டுப்படுத்துமாறு அதிகாரிகளிடம் கேட்டுள்ளார்.

போதகருக்கு கொரோனா ரைவஸ் தொற்றுள்ளமை தொடர்பான பரிசோதனை நேர்மறை (Positive) என வந்துள்ளது.

ஆனால் அவர் சுகமாக உள்ளார். நாம் அவர் சுகமடைவதற்காக விசுவாசிக்கின்றோம். போதகருக்கு கொரோனா தொற்றுள்ளமை உறுதிப்படுத்தப்பட்ட தகவலை பொலிஸார் உள்ளிட்டவர்களுக்கு வழங்கமுடியும் என்று அவரது உதவிப் போதகர் யோசுவா ராஜாநேசன் தெரிவித்தார்.

இந்த தகவலை யாழ்ப்பாணப் போதகரிடமிருந்து

முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினா் அங்கஜன் இராமநாதன் பெற்றுக்கொண்டார்.

இதுதொடர்பில் வடமாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர்,யாழ்ப்பாணம் போதனா வைத்தி்யசாலைப் பணிப்பாளர், யாழ்ப்பாணம் மூத்த பொலிஸ் அத்தியட்சகர் உள்ளிடோருக்கு விடயத்தைத் தெரியப்படுத்திய அங்கஜன் இராமநாதன்,

உரிய நடவடிக்கைகளை விரைந்து எடுக்குமாறு கேட்டுக்கொண்டார். சுவிட்சர்லாந்துப் போதகர் யாழ்ப்பாணத்தில் பங்கேற்ற நிகழ்வுகள், அவர் சென்று வந்த இடங்கள் உள்ளிட்டவற்றில் தொடர்புடைய அனைவரையும் தனிமைப்படுத்தலுக்குட்படுத்தி யாழ்ப்பாணத்தில் கொரோனா வைரஸ் அச்சநிலையைப் போக்குமாறும்

மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுவின் தலைவரும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான அங்கஜன் இராமநாதன் அதிகாரிகளிடம் கேட்டுள்ளார்.