நெஞ்சு வலி, யாரோ அமுக்குவது போன்ற உணர்வு… கொரோனா பாதித்தவர்கள் கூறிய உண்மைகள்

கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்ட மக்கள் உலகம் முழுக்க தங்கள் அனுபவத்தை பகிர்ந்து வருகிறார்கள். தங்களுக்கு கொரோனா ஏற்பட்ட சமயத்தில் எப்படி உணர்ந்தோம் என்பது தொடர்பாக விளக்கம் அளித்து உள்ளனர்.

கொரோனா வைரஸ் காரணமாக உலகம் முழுக்க பலி எண்ணிக்கை 13,071 ஆக உள்ளது. 3 லட்சத்து 8 ஆயிரம் பேர் இந்த வைரஸ் காரணமாக இதுவரை பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்கள். இதில் ஒரு நல்ல விஷயம் என்னவென்றால் இந்த வைரஸ் மூலம் பாதிக்கப்பட்ட பலர் முழுமையாக சிகிச்சை பெற்று வீடு திரும்பி உள்ளனர்.

அதன்படி உலகம் முழுக்க மொத்தம் 95,834 கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டு நலம் அடைந்து உள்ளனர். இவர்களை அவர்கள் நாட்டு அரசு தொடர்ந்து கண்காணித்து வருவதும் குறிப்பிடத்தக்கது.

கொரோனா வைரஸ் தாக்கி பின் குணமடைந்து வீடு திரும்பி இருப்பவர்கள் வெளியே செல்ல கூடாது என்று அறிவுத்தப்பட்டு இருக்கிறது. இந்த நிலையில் வீட்டிற்குள் இருக்கும் இவர்கள் தங்கள் கொரோனா அனுபவங்களை போஸ்ட்டாக சமூக வலைத்தளங்களில் பகிர்ந்து வருகிறார்கள். தங்களுக்கு எப்படி கொரோனா வந்தது. கொரோனா வந்த போது எப்படி உடலில் மாற்றங்கள் ஏற்பட்டது என்று விளக்கி உள்ளனர்.

திடீர் நெஞ்சுவலி
அந்த வகையில் அமெரிக்காவை சேர்ந்த தியா டேவிஸ் என்ற பெண், எனக்கு திடீர் என்று நெஞ்சு வலித்தது. எனக்கு இருமல் வரவில்லை. ஆனால் கடுமையாக நெஞ்சு வலித்தது. அன்று என்னால் மூச்சு விட முடியவில்லை. தொடர்ந்து மூச்சு விட முடியாமல் உயிரே போகும் அளவிற்கு பயம் இருந்தது. என் உடல் என்னிடம் இல்லாதது போல உணர்ந்தேன். அதுதான் இருப்பதிலேயே மோசமான அறிகுறி ஆகும், என்றுள்ளார்.

லேசான காய்ச்சல்
அதேபோல் ஜப்பான் டயமண்ட் பிரின்சஸ் கப்பலில் இருந்த கார்ல் கோல்டுமேன் தெரிவித்த போதும் எனக்கு கடுமையான வறட்டு இருமல் இருந்தது. அதேபோல் மிக லேசான காய்ச்சல் இருந்தது. இதை நான் சாதாரணமாக எடுத்துக்கொண்டேன். ஆனால் போக போக இருமல் அதிகம் ஆனது. என்னால் மூச்சு விடமால் முடியாமல் நெஞ்சை யாரோ அமுக்குவது போல இருந்தது, என்று கூறியுள்ளார்.

இரவு நேரத்தில் மட்டும் வலி
மேலும் எனக்கு அதன்பின் கொரோனா என்று கூறினார்கள். எனக்கு எப்படி கொரோனா வந்தது என்று தெரியவில்லை. நான் நல்ல ஆரோக்கிய உணவுகளை மட்டும்தான் சாப்பிடுவேன். ஆனாலும் வந்தது. எனக்கு சாதாரண காய்ச்சல் என்றுதான் நினைத்தேன். தலைவலி இல்லை. ஆனால் நெஞ்சு மட்டும் இரவு நேரத்தில் மிக மோசமாக வலித்தது. உணவு சாப்பிட சிரமமாக இருந்தது, என்றுள்ளார்.

எந்தவொரு அறிகுறியும் இல்லாமல் கொரோனா
அதே கப்பலில் இருந்த இன்னொரு கொரோனா பாதித்த பயணியான மார்க் ஜோர்கென்ஸன் பேசியதாவது, எனக்கு கொரோனா ஏற்பட்ட போது எந்த விதமான அறிகுறியும் இல்லை. என்னால் அதை நம்ப முடியவில்லை. எனக்கு எந்த விதமான அறிகுறியும் இல்லாமலே கொரோனா ஏற்பட்டது. நம்புங்கள், நான்தான் இதற்கு சாட்சி. கொரோனா அறிகுறி இல்லாமல் கூட உங்களுக்கு தோன்றலாம், என்று கூறியுள்ளார்.

கொரோனாவிற்கு சிகிச்சை
இவர்கள் மூன்று பேரும் சிகிச்சை முறை குறித்து ஒரே மாதிரி விளக்கி உள்ளனர். காய்ச்சலையும் இருமலையும் கட்டுப்படுத்த மட்டுமே மருந்து கொடுப்பார்கள். கொரோனாவிற்கு மருந்து எதுவும் இல்லை. அதனால் கொரோனாவிற்கு மருந்து கொடுக்காமல் அதனால் ஏற்படும் விளைவுகளை மட்டும் மருந்து கொடுத்து தனிப்பார்கள். அதாவது காய்ச்ஸல் இருந்தால் காய்ச்சலுக்கான மருந்து கொடுப்பார்கள்.

இருமல் இருந்தால் இருமலுக்கான மருந்து கொடுப்பார்கள். உடலில் வேறு என்ன பிரச்சனை இருக்கிறதோ அதற்கு எல்லாம் மருந்து கொடுத்து உங்கள் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க செய்வார்கள். ஆனால் இதெல்லாம் கொரோனாவை குணப்படுத்தாது. இது பின் விளைவுகளை கட்டுப்படுத்தி கொரோனாவை கட்டுப்படுத்தும். இதை தொடர்ந்து செய்தால் கொரோனா குணமாக ஓரளவு வாய்ப்புகள் உள்ளது, என்று அவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.