வெளியில் சென்று திரும்புவர்கள் நீராடிய பின்னர் வீட்டுக்குள் நுழைவது பாதுகாப்பானதாகும்!

வெளியில் சென்று திரும்புவர்கள் நீராடிய பின்னர் வீட்டுக்குள் நுழைவது பாதுகாப்பானதாகும் என விசேட வைத்தியர் அநுருத்த பாதனிய குறிப்பிட்டுள்ளார்.

ஊடகம் ஒன்று வழங்கியுள்ள விசேட செவ்வி ஒன்றிலேயே இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன்போது கருத்து வெளியிட்டிருந்த அவர், “கொரோனா வைரஸானது ஒரு மாதத்திற்குள் நபரொருவரிலிருந்து சுமார் 403 பேருக்கு மிக வேகமாக பரவக் கூடியளவு ஆபத்தானது.

இதன் பாரதூரத் தன்மையை உணர்ந்து பொதுமக்களின் அத்தியாவசிய தேவைகளை நிறைவு செய்வதற்காக தற்காலிகமாக ஊரடங்கு சட்டம் நீக்கப்படும்போது பொது மக்கள் மிக அவதானமாக செயற்பட வேண்டும்.

பொதுமக்கள் தமக்கு தேவையான அத்தியாவசிய பொருட்களை கொள்வனவு செய்தல் உள்ளிட்டவற்றுக்காகவே தற்காலிகமாக ஊரடங்கு சட்டத்தை நீக்குவதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது.

எனினும் மக்களின் பாதுகாப்பிற்காக ஊரடங்கு சட்டம் பிறப்பிக்கப்பட்டுள்ளதை அனைவரும் உணர்ந்து தம்மை பாதுகாத்துக்கொள்ள வேண்டும்.

குறிப்பாக கொரோனா வைரஸ் தீவிரமாகக் பரவலடைந்தால் எமது சொத்துக்கள் மாத்திரமின்றி விலைமதிப்பற்ற உயிரையும் பாதுகாக்க முடியாத சூழல் ஏற்பட்டுவிடும்.

வைரஸ் பரவல் தீவிரமடைந்தால் பொது மக்களின் உயிரைப் பாதுகாப்பதில் காணப்படும் சிக்கல் குறித்து எம்மைப் போன்றே நீங்கள் ஒவ்வொருவரும் அறிவீர்கள்.

ஒரு மாதத்திற்குள் ஒரு நபரிடமிருந்து சுமார் 403 பேருக்கு மிகத் துரிதமாக இந்த வைரஸ் பரவும் என்பது இதில் காணப்படும் மிகப் பாரதூரமான விடயமாகும்.

எனவே தற்காலிகமாக பொலிஸ் ஊரடங்கு சட்டம் நீக்கப்படும் போது அத்தியாவசிய பொருட்களை கொள்வனவு செய்ய செல்பவர்கள் ஏற்கனவே வழங்கப்பட்டுள்ள சுகாதார அறிவுறுத்தல்களை பின்பற்றுமாறு கேட்டுக் கொள்கின்றோம்.

ஒரு குடும்பத்தில் ஒருவர் மாத்திரம் வெளியில் செல்வது சிறந்ததாகும். அவ்வாறு வெளியில் செல்பவர்கள் முகக்கவசம் அணிந்திருப்பது அத்தியாவசியமானது என்பதோடு விற்பனை நிலையங்களில் பிரிதொருவரிலிருந்து சுமார் 1 மீற்றர் தூர இடைவெளியில் நிற்க வேண்டும்.

பொருட்களை கொள்வனவு செய்து வீடு திரும்பிய பின்னர் கொள்வனவு செய்த பொருட்களை சிறிது நேரம் வெயிலில் வைத்து வீட்டுக்குள் எடுத்துச் செல்ல வேண்டும்.

அத்தோடு வெளியில் சென்று திரும்புவர்கள் நீராடிய பின்னர் வீட்டுக்குள் நுழைவது பாதுகாப்பானதாகும். ஆடைகளை சலவை செய்து வெயிலில் உலர வைத்து எடுப்பதும் அவசியமாகும்“ எனக் குறிப்பிட்டுள்ளார்.