இன்று முதல் கோழி முட்டைக்கு நிர்ணய விலை
கொரானா தாக்கத்தினால் தனிமைப்படுத்தப்பட்டு கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளவர்களுக்கு எவ்வித தட்டுப்பாடுமின்றி கோழி முட்டையை உணவில் சேர்த்து வழங்க அனைத்து முட்டை உற்பத்தியாளர் சங்கம் இணக்கம் தெரிவித்துள்ளது.
அலரி மாளிகையில் இன்று பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவிற்கும் அனைத்து முட்டை உற்பத்தியாளருக்கும் இடையில் சந்திப்பு இடம்பெற்றது.
இதன் போது பிரதமர் சங்கத்தினரிடம் விடுத்த கோரிக்கைக்கு அவர்கள் இணக்கம் தெரிவித்துள்ளார்கள்.
தற்போதைய நிலைமையினை கருத்திற் கொண்டு முட்டையின் விலையை குறைப்பதற்கான நடவடிக்கைகளை முன்னெடுக்குமாறு பிரதமர் சங்கத்தின் தலைவர் ஆர். எம். சரத் ரத்நாயக்கவிடம் குறிப்பிட்டார்.
இதற்கமைய இன்று முதல் ஒரு முட்டையின் விலை பத்து ரூபாவிற்கு விற்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.
அந்தவகையில் சதோச மற்றும் ஏனைய விற்பனை நிலையங்கள் ஊடாக குறைந்த விலையில் முட்டைகளை பெற்றுக் கொள்ள முடியும் எனவும் தெரிவிக்கபட்டுள்ளது.
அதற்காக தற்போது 450 லொறிகள் நாடுதழுவிய ரீதியில் முட்டைகளை விநியோகிக்க ஈடுப்படுத்தப்பட்டுள்ளது.
இதேவேளை அரசாங்கம் நிர்ணயித்த விலைக்கு மாறாக அதிக விலையில் முட்டையினை விற்பவர்கள் தொடர்பில் 0372293300 என்ற இலக்கத்திற்கு அழைத்து பொது மக்கள் முறைப்பாடு செய்ய முடியும் எனவும் அனைத்து முட்டை உற்பத்தியாளர் சங்கம் தெரிவித்துள்ளது.






