இங்கிலாந்தில் இருந்து இலங்கைக்கு வருகைத் தந்த மூன்று பேரை நோர்வூட் பகுதிக்கு அழைத்து வந்த கார் சாரதிக்கு கொரோனா தொற்று இருப்பது இனங்காணப்பட்டுள்ளது.
மேலும் இவர்கள் நான்கு நாட்கள் தங்கியிருந்த நோர்வூட் பகுதியில் உள்ள சுற்றுலா விடுதிக்கு இன்று சீல் வைக்கப்பட்டுள்ளதாக நோர்வூட் பொலிஸார் தெரிவித்தனர்.
சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது,
கடந்த 19ஆம் திகதி நோர்வூட் பகுதியில் உள்ள சுற்றுலா விடுதிக்கு வருகை தந்த இங்கிலாந்து நாட்டைச் சேர்ந்த மூன்று பேர் குறித்த விடுதியில் தங்கி விட்டு சென்றுள்ளனர்.
விடுதியின் உரிமையாளர் இது குறித்து நோர்வூட் பொலிஸார், சுகாதார பரிசோதகர்கள், நோர்வூட் பிரதேசசபைக்கு அறிவிக்கப்படாமை தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்ட போது குறித்த சுற்றுலா பயணிகளை ஏற்றி வந்த கார் வண்டியின் சாரதியை அழைத்து பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டிருந்தனர்.
பின்னர் குறித்த சாரதியை சந்தேகத்தின் பேரில் அங்கொட வைத்தியசாலையில் அனுமதித்து மருத்துவ பரிசோதனைக்கு ஈடுபடுத்தபட்ட போதே குறித்த சாரதிக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
இதேவேளை, நோர்வூட் பிரதேசபையின் தலைவர் ரவி குழந்தைவேல் தலைமையில் முன்னெடுக்கப்பட்ட நடவடிக்கையின் போது குறித்த பயணிகள் தங்கியிருந்த விடுதி சீல் வைக்கப்பட்டுள்ளதோடு விடுதியின் உரிமையாளர் மற்றும் அவர்களின் குடும்பத்தினரும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக சுகாதார பரிசோதகர்கள் மேலும் தெரிவித்தனர்.
கொரோனா தொற்று நோய் இருப்பதாக இனங்காணப்பட்ட நபர் கொழும்பு பகுதியை சேர்ந்தவர் என பொதுசுகாதார பரிசோதகர்கள் மேலும் தெரிவித்தனர்.