பிரித்தானியாவில் சடுதியாக அதிகரித்துள்ள இறப்புவீதம் – அரசின் அறிவிப்பில் மக்கள் அசமந்தம்

இதற்கு என்ன தீர்வு என அடிமுடி தெரியாது கொரோனா வைரஸால் உலகமே மரணத்தோடு போராடிக்கொண்டிருக்கும் நிலையில் பிரித்தானியாவில் இன்றைய தினம் உயிரிழப்பின் எண்ணிக்கை உயர்வடைந்துள்ளது.

தற்போதைய தரவுகளின்படி 87 ஆக மரணங்கள் பதிவான நிலையில், பிரித்தானியாவில் இதுவரையான மரணங்களின் எண்ணிக்கை 422 ஆகும்.

நேற்றிரவு பிரித்தானிய பிரதமர் பிரித்தானியாவை முடக்கியதாக அறிவித்திருந்தாலும், வழமைபோன்று சன நெரிசல் அதிகமாகவே பிரித்தானியாவில் காணக்கூடியதாக இருக்கின்றது.

எனினும் சமூக வலைத்தளங்களில் வெளியாகிய படங்களுக்கமைய லண்டன் சுரங்க ரயில்கள் இன்னும் பயணிகளால் நிரம்பியுள்ளதாகவும் சில தரப்பினர் இன்னமும் திறந்த நிலையையே எதிர்பார்ப்பதாகவும் குறிப்பிடப்படுகின்றது.

பிரித்தானியாவை முடக்கும் ஆலோசனை குழப்பமாக இருப்பதாக முறைப்பாடுகள் கிடைத்துள்ளது, இந்த ஆலோசனை போதுமான தூரம் செல்லவில்லை எனவும் பிரித்தானிய செய்திகள் தெரிவிக்கின்றன.

பிரித்தானியாவின் தேசிய சுகாதார சேவை, இந்த பரவலை கட்டுப்படுத்த கூடிய வலுவில் உள்ளதனை உறுதிப்படுத்த வேண்டிய முக்கியமான இடத்தில் உள்ளதாக அமைச்சரவை அலுவலக அமைச்சர் Michael Gove குறிப்பிட்டுள்ளார்.

சமூக தொடர்பைக் கட்டுப்படுத்துவது மற்றும் அரசாங்கம் முன்வைத்த ஆலோசனையைப் பின்பற்றுவது மக்களின் கடமையாகும்.

மக்கள் தங்களைக் காப்பாற்றிக் கொள்ளவும், தேசிய சுகாதார சேவையை பாதுகாக்கவும், உயிர்களைக் காப்பாற்றவும் வீட்டிலேயே இருக்க வேண்டும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

பிரித்தானியா முற்றாக முடங்கும்வரைக்கும் இறப்புவீதம் அதிகரிக்கும் என்பது சுட்டிக்காட்டத்தக்கது.

பிரித்தானிய சுரங்கப்பாதை தொடரூந்துச் சேவைகளை முடக்கும் வரையில் உயிரிழப்புக்கள் வீதம் மேலும் அதிகரிக்கும் எனவும் பிரித்தானிய மாநகர முதல்வர் தெரிவித்திருந்தமையும் சுட்டிக்காட்டத்தக்கது.