ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்சவால் அறிவிக்கப்பட்ட வங்கிகள் மற்றும் நிதி நிறுவனங்களில் கடன்கள் மற்றும் வாகனக் குத்தகை (லீசிங்) பெற்றோருக்கான சலுகைகள் தொடர்பில் இலங்கை மத்திய வங்கியால் இன்று மார்ச் 24ஆம் திகதி சுற்றறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.
கடந்த 20ஆம் திகதி இடம்பெற்ற அமைச்சரவைத் தீர்மானத்தின் அடிப்படையில் ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்சவால் வழங்கப்பட்ட அறிவுறுத்தலின் அடிப்படையில் வியாபாரம் மற்றும் தனிநபர்கள் பெற்றுக்கொண்ட கடன்களுக்கான சலுகைகள் தொடர்பில் இந்தச் சுற்றறிக்கை வெளியிடப்படுவதாக இலங்கை மத்திய வங்கியின் ஆளுநர் பேராசிரியர் டபிள்யூ.டி.லக்ஸ்மன் குறிப்பிட்டுள்ளார்.
நாட்டில் கோரோனா (கொவிட் -19) வைரஸ் பரவலின் காரணமாக அசௌகரியங்களுக்குள்ளாகியுள்ள மக்களுக்காக தனக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரங்களின் கீழ் நேற்று (மார்ச் 23) முதல் நடைமுறைக்கு வரும் வகையில் பல்வேறு நிவாரணங்கனை ஜனாதிபதி அறிவித்திருந்தார். அதனடிப்படையில் வங்கி மற்றும் நிதி நிறுவனங்களுக்குரிய சுற்றறிக்கையை மத்திய வங்கி வெளியிட்டுள்ளது.
அதனடிப்படையில் வங்கிகள் மற்றும் நிதி நிறுவனங்களால் வழங்கப்பட்ட கடன்கள் (முதல் மற்றும் வட்டி) தொடர்பில் பின்பற்றப்படவேண்டிய நடவடிக்கைகளில்,
முச்சக்கரவண்டி, பாடசாலைச் சேவைக்கான வான், பாரவூர்திகள், பொருள்கள் போக்குவரத்துக்கான சிறியரக வாகனங்கள் மற்றும் சுயதொழிலுக்கான பேருந்துகளின் உரிமையாளர்களுக்கான லீசிங் கடன் தவணைக் கட்டணம் அறவிடுவது 06 மாதங்களுக்கு இடைநிறுத்தப்பட்டுள்ளது.
தனியார் துறை நிறைவேற்று தர உத்தியோகத்தர்கள் அல்லாத அனைவரது சம்பளத்தில் பெறப்பட்ட கடன் தவணை கட்டணங்கள் அறவிடுவது 2020 மே மாதம் 30 ஆம் திகதி வரை இடைநிறுத்தப்பட்டுள்ளது.
வங்கி, நிதி நிறுவனங்களினால் ரூ.10 லட்சத்திற்கு குறைவான கடன் மற்றும் லீசிங் அறவிடுவது 03 மாதங்களுக்கு இடைநிறுத்தப்பட்டுள்ளது.
சிறிய மற்றும் நடுத்தர தொழில் முயற்சிகள், சுற்றுலாத்துறை, ஆடைத் துறை, தோட்டத்துறை மற்றும் தொழில்நுட்பத் துறை ஆகியவற்றுக்கு வழங்கப்பட்ட கடன்களை மீள அறவிடுவது 6 மாதங்களுக்கு இடைநிறுத்தப்பட்டுள்ளது.
5 லட்சம் ரூபாய்க்கு குறைவான வங்கி காசோலைகள் செல்லுபடியாகும் காலஎல்லையை 30.04.2020ஆம் திகதிவரை நீடிக்கப்படவேண்டும்.
ஊரடங்கு தளர்த்தப்படும் வேளையில் அனைத்து வங்கிகளும் குறைந்தளவு பணிக்குழாமுடன் காலை 8 மணி தொடக்கம் பிற்பகல் ஒரு மணிவரை திறந்திருக்கவேண்டும் உள்ளிட்டவை சுற்றறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளன.






