யாழ் மாவட்டத்தின் மக்கள் மற்றும் சந்தை வியாபாரிகளிற்கு அரச அதிபரின் முக்கிய தகவல்

யாழ்ப்பாண மாவட்டத்தில் ஊரடங்கு சட்டம் தளர்த்தப்படும் போது பிரதான சந்தைகள் மூடப்படும் என தெரிவித்துள்ள யாழ் மாவட்ட செயலர் கணபதிப்பிள்ளை மகேசன் மாற்றீடாக பொது மைதானங்கள், பொது இடங்கள் போன்றவற்றில் பரந்த வெளியில் வியாபாரங்களை நடத்துமாறு அறிவுறுத்தியுள்ளதாக தெரிவித்தார்.

யாழ்ப்பாணம் மாவட்ட செயலகத்தில் அவர் இன்று நடத்திய பத்திரிக்கையாளர் சந்திப்பிலேயே அவர் இதனை தெரிவித்தார்.

யாழ்ப்பணத்தில் வறிய குடும்பங்கள், சமுர்த்தி பெறும் குடும்பங்கள் ஆகியோருக்கு அத்தியாவசிய பொருட்கள் இலவசமாக வழங்குவதற்கான அத்தனை நடவடிக்கைகளும் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

மேலும் மாவட்டத்திற்கு தேவையான அத்தியாவசிய பொருட்களை கொண்டுவருவதற்கு சகல ஏற்பாடுகள் செய்து கொடுக்கப்பட்டுள்ளன. அதனை வணிகர் கழகம் முன்னெடுத்து வருகின்றது.

கொழும்புக்கு சென்று அத்தியாவசிய பொருட்களை எடுத்து வருபவர்களுக்கு பாஸ் வழங்கப்படுகின்றன. அவ்வாறு பாஸ் எடுத்து பொருட்களை ஏற்ற செல்பவர்களுக்கு சில அறிவுரைகளும் வழங்கப்பட்டுள்ளன.

பொருட்களை ஏற்ற செல்லும் லொறிகளில் எந்த மாவட்டம் என்ன பொருட்கள் போன்றவற்றை காட்சிப்படுத்த வேண்டும்.மேலும் முக்கியமாக செல்லும் வாகனங்களில் “அத்தியாவசிய தேவைகள் சேவை” என பெயரிடப்பட்டு செல்ல வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

கடற்றொழிலாளர்களுக்கும் தற்போது தொழில் செய்வதற்கான ஏற்பாடுகள் ஏற்படுத்திக் கொடுக்கப்பட்டுள்ளன. யாழ்ப்பணத்தில் ஊரடங்கு சட்டம் தளர்த்தப்படும் போது பொதுச் சந்தைகளில் மக்கள் கூட்டத்தை கட்டுப்படுத்துவதில் பாரிய சவால்களை எதிர்நோக்குகின்றோம்.

எனவே பொதுச் சந்தைகள் தொடர்பில் வடக்கு மாகாண உள்ளுராட்சி ஆணையாளரை அழைத்து பேசி சில முடிவுகள் எடுத்துள்ளோம்.

மேலும் ஊரடங்கு சட்டம் அமுலில் இருக்கும் போது பொதுமக்கள் வீடுகளில் இருத்தவாறே அத்தியாவசிய பொருட்களை கொள்வனவு செய்ய ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

அதற்கு கூட்டுறவு திணைக்களம்,வணிகர் கழகம் இணைந்து நடமாடும் விற்பனை சேவைகளை முன்னெடுக்க உள்ளனர். இதன் ஊடாக மக்கள் தேவையற்று பொது இடகளில் அதிகளவாக ஒன்று கூடுவது தவிர்க்கப்படும் என நம்புகின்றோம் என்றும் அவர் கூறினார்.