தேர்தல் பிரசார கூட்டத்தில் கண்ணாடி போத்தல்களினால் தாக்குதல்: ஐவர் கைது!

வெலிமடை – டயரபா சந்தியில் நேற்று (திங்கட்கிழமை) இரவு இடம்பெற்ற ஐக்கிய தேசிய கட்சியின் பிரசார கூட்டத்தில் கண்ணாடி போத்தல்களினால் தாக்குதல் நடத்தப்பட்டதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

குறித்த தாக்குதலில் காயமடைந்தவர்கள் வெலிமடை வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

தாக்குதலுடன் தொடர்புடையவர்கள் என சந்தேகிக்கப்படும் தாமரை மொட்டு சின்னத்தில் போட்டியிடும் வேட்பாளர் உட்பட ஐவரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

கூட்டம் இடம்பெற்றுக் கொண்டிருந்த வேளையில் திடீரென அங்கு வந்த சிலர் கண்ணாடி போத்தல்களை எறிந்து தாக்குதல்களை மேற்கொண்டுள்ளனர்.

இசை நிகழ்ச்சியுடன் கூடிய குறித்த நிகழ்வில் பாதுகாப்பு கருதி சுமார் 100க்கும் அதிகமான பொலிஸ் உத்தியோகத்தர்கள் கடமையில் ஈடுபடுத்தப்பட்டிருந்தனர்.

குறித்த பகுதியில் தாமரை மொட்டு சின்னத்தில் போட்டியிடும் வேட்பாளரின் காரியாலயமும் ஐக்கிய தேசியக் கட்சியின் காரியாலயமும் அருகருகாமையில் அமைந்துள்ளதோடு மதுபானசாலை ஒன்றும் அப்பகுதியில் காணப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

இதனையடுத்து குறித்த பிரதேசத்தில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டவர்களை வெலிமடை நீதிமன்றத்தில் ஆஜர்செய்ய நடவடிக்கை எடுத்துள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.