பருத்தித்துறை -பொன்னாலை வீதி திறக்கப்பட்டது. ஜனாதிபதிக்கு நன்றி தெரிவித்த மக்கள்

28 ஆண்டுகளிற்கு பின்பு #பருத்தித்துறை-#பொன்னாலை வீதி இன்று காலை 8.35 மணியளவில் திறந்து வைக்கப்பட்டு யாழ்.மாவட்ட கட்டளைத்தளதி மேஜர் ஜெனரல் தர்சன கெட்டியாராச்சி உத்தியோகபூர்வமாக போக்குவரத்து சபை பஸ் சேவையையும் ஆரம்பித்து வைத்தார்.

இவ்வீதி மயிலிட்டித்துறைமுகத்தினை அண்டிய பகுதியில் இதுவரை காலமும் இராணுவத்தின் ஆக்கிரமிப்பில் 3 கிலோ மீற்றர் வரையான பகுதி உயர்பாதுகாப்பு வலயமாக இருந்ததுடன் இராணுவத்தினரின் போக்குவரத்து மட்டுமே இடம்பெற்று வந்தது

இந்நிலையில் இவ் வீதியூடாக நாளை தொடக்கம் நேர அட்டவணைப்படி போக்குவரத்து சபையின் பஸ் மூலம் பயணிகள் பஸ் சேவை இடம்பெறவுள்ளது. மக்கள் துவிச்சக்கரவண்டி மோட்டார் சைக்கிளில் தனிப் பயணங்கள் செய்வது ஓரிரு வாரங்களின் பின்னர் அனுமதிக்கப்படுவார்கள் என யாழ்.மாவட்ட அரசாங்க அதிபர் தெரிவித்தார்.

இந்நிகழ்வில் யாழ்.மாவட்ட கட்டளைத்தளபதி மேஜர் ஜெனரல் தர்சன கெட்டியாராச்சி. 51 ஆவது படையின் கட்டளை தளபதி ரொஷான் செனவிரட்ன, யாழ். மாவட்ட அரசாங்க அதிபர் நா.வேதநாயாகன், தெல்லிப்பளை பிரதேச செயலர், மீள்குடியேற்ற புனர்வாழ்வு சங்க தலைவர் மற்றும் பொதுமக்கள் ஆகியோர் கலந்துகொண்டனர்.

நேற்றைய தினம் யாழ்ப்பாணம் தேர்தல் பிரச்சார கூட்டத்திற்கு வந்த ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடம் இவ்வீதி திறக்கப்படவேண்டும் என மக்கள் கோரிக்கையினை விடுத்ததாக குறிப்பட்டார் இநநிலையில் நேற்று மாலைதிறக்கப்படலாம் என இருந்த நிலையில் இன்று காலை திறந்து வைக்கப்பட்டுள்ளது. இதையடுத்து நிகழ்வுக்கு வந்திருந்த மக்கள் ஜனாதிபதிக்கும் யாழ்.மாவட்ட கட்டளைத் தளபதிக்கும் தமது நன்றிகளைத் தெரிவித்தனர்.

இப்பகுதியில் மீள்குடியேறிய மக்கள் மட்டுமல்லாது மயிலிட்டி மீனவர்களும் குறுகிய நேரத்தில் வந்து தமது இடங்களை சீரமைத்து குடியமர்வதற்கன ஏற்பாடுகளில் ஈடுபட முடியும்.