கொரோனா பரவுவதை தடுக்க மேற்கொண்ட முயற்சிகள் வீணாகி போனது – மருத்துவர் அனில் ஜாசிங்க

கொரோனா வைரஸ் பரவுவதை தடுப்பதற்காக சுகாதார அதிகாரிகள் வழங்கிய ஆலோசனைகளை கவனத்தில் கொள்ளாது மக்கள் வீதிக்கு வந்து பயணங்களை மேற்கொள்ள ஆரம்பித்த காரணத்தினால், இதுவரை மேற்கொண்ட அனைத்து அர்ப்பணிப்புகளும் வீணாக போயுள்ளது என சுகாதார சேவைகள் பணிப்பாளர் மருத்துவர் அனில் ஜாசிங்க தெரிவித்துள்ளார்.

ஊரடங்குச் சட்டம் அமுலில் இருக்கும் நேரத்தில் வரலாற்றில் என்றுமில்லாத வகையில் வீதிகளில் நேற்று அதிகளவான வாகனங்கள் பயணித்தன.

மக்கள் பாதுகாப்பு தொடர்பான எந்த உணர்வுமின்றி வழமைப் போல் வீதிகளுக்கு வந்துள்ளனர். கடந்த 19 ஆம் திகதி முதல் பிராந்திய ரீதியாக நாடு முழுவதும் ஊரடங்குச் சட்டத்தை அமுல்படுத்தி வைரஸில் இருந்து மக்களை காப்பாற்ற அதிகாரிகள் எடுத்த நடவடிக்கை நேற்று மாலை சிக்கலாகி போனதை காண முடிந்தது.

பொலிஸ் ஊரடங்குச்சட்டம் அமுல்ப்படுத்தப்பட்டுள்ள நேரத்தில் மக்கள் சாதாரண விடுமுறை தினம் போன்று சுதந்திரமாக வீதிகளில் நடமாடி திரிந்தது ஏன் என்பதை நினைத்து பார்க்க முடியவில்லை எனவும் மருத்துவர் அனில் ஜாசிங்க குறிப்பிட்டுள்ளார்.