யாழ். மாவட்டத்தில் மருத்துவர்கள், தாதியர்களுக்கு ஏற்பட்ட நெருக்கடி! துணிந்து முடிவெடுத்த இளைஞன்

இலங்கையில், கொரோனா வைரஸ் தொற்று வேகமாக பரவி வருகின்றது. இது வரையில், 113 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

குறிப்பாக கொழும்பு, களுத்துறை, கம்பஹா உள்ளிட்ட மாவட்டங்களிலும், வட மாகாணத்திலும் கொரோனா வைரஸ் தொற்று கூடிய பிரதேசமாக அடையாளம் காணப்பட்டுள்ளன.

இதனையடுத்து அந்த பகுதிகளில் விசேட வேலைத்திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டுள்ளதுடன், ஊரடங்கு சட்டமும் அமுல்செய்யப்பட்டுள்ளது.

இந்நிலையில், யாழ்ப்பாணத்தில் கொரோனா வைரஸ் தொற்று குறித்து மக்கள் மத்தியில் கடும் அச்ச உணர்வு ஏற்பட்டுள்ளது.

இதனால், வெளிமாவட்டங்களில் இருந்து யாழ்ப்பாணத்திற்கு வந்து தங்கியிருந்து பணியாற்றும் வைத்தியர்கள் மற்றும் தாதியர்களுக்கு தங்குவதற்கு இடம் கொடுத்திருந்தவர்கள் அவர்களை வெளியேற்றியுள்ளனர்.

இதனால் பெருமளவான வைத்தியர்கள் மற்றும் தாதியர்கள் பாதிக்கப்பட்டிருந்த நிலையில், அவர்களுக்கு உதவும் முகமாக இளைஞர் ஒருவர் முன்வந்துள்ளார். சமூக ஆர்வலர் மற்றும் சட்டத்துறை மாணவனான இராசையா உமாகரன் இந்த நடவடிக்கையை எடுத்துள்ளார்.

அந்த வகையில் குறித்த இளைஞர் பாதிக்கப்பட்ட வைத்தியர்கள் மற்றும் தாதியர்கள் தங்குவதற்கு தனக்கு சொந்தமான இரண்டு வீடுகளை வழங்குவதற்கு முன்வந்துள்ளார்.

இதன்படி, பாதிக்கப்பட்ட வைத்தியர்கள் மற்றும் தாதியர்கள் கொரோனா வைரஸ் குறித்த பிரச்சினை முடியும் வரையில் தனது வீட்டில் தங்கிக்கொள்ளலாம் என அந்த இளைஞர் கூறியுள்ளார்.

இந்நிலையில், பாதிக்கப்பட்டவர்கள் பின்வரும் இலக்கத்தின் ஊடாக (+94772473201, +94761746900) தன்னை தொடர்பு கொள்ள முடியும் எனவும் கூறிள்ளார்.

மேலும் குறித்த இளைஞர், மேலும் பல இளைஞர்களுடன் இணைந்து தற்போதுள்ள நெருக்கடி நிலையினை உணர்ந்து பாதிக்கப்பட்ட மக்களுக்கு உலர் உணவுப்பொருட்களை வழங்கி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.