எனது போர் வெற்றியை பிரபாகரன் கூட நம்பியிருக்கவில்லை: மட்டக்களப்பில் கருணா

200 விகாரைகளை அமைப்பதற்கு பட்டிருப்புத் தொகுதியின் ஐக்கிய தேசியக் கட்சியின் அமைப்பாளர் சோ.கணேசமூர்த்திக்கு நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக தமிழர் ஐக்கிய சுதந்திர முன்னணியின் தலைவரும், முன்னாள் பிரதியமைச்சருமான கருணா தெரிவித்துள்ளார்.
மண்முனை தென்எருவில் பற்று தேற்றாத்தீவு வட்டாரத்தில் போட்டியிடும் தமிழர் ஐக்கிய சுதந்திர முன்னணியின் தலைமை வேட்பாளர் தி.தேவறஞ்சன் தலைமையில் தேற்றாத்தீவு கிராமத்தில் நேற்று நடைபெற்ற தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.
அவர் தொடர்ந்து அங்கு பேசும் போது தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தில் நான் கட்டளைத் தளபத்தியாக இருக்கும்போது 40000 போராளிகள் எனக்குக் கீழ் இருந்தார்கள். அதிலே 11000 பெண் போராளிகள். இவர்களை வைத்து போரிட்டவன்தான் மட்டக்களப்பான்.
அப்போது எமது வீரத்தைக் காட்டியிருந்தோம். 300 பேருடன் போய் 24 மணி நேரத்தில் ஆனையிறவு படை முகாமை கைப்பற்றினேன். எனது இந்த வெற்றியை தலைவர் பிரபாகரன் கூட நம்பியிருக்கவில்லை. அந்த சண்டையில் 18 பேர் வீரச்சாவடைந்தும், 70 பேர் காயப்பட்டும் இருந்தார்கள்.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிலிருந்து தற்போது பலர் வெளியேறி இருக்கின்றனர் இவ்வாறு கூட்டமைப்புக்குள் நடைபெறும் என எனக்கு நன்கு தெரியும். சம்மந்தன் ஐயா ஓய்வெடுத்தால் தமிழ் தேசியக் கூட்டமைப்பு மற்றுமுழுதாக சிதறிப்போய்விடும். அக்கூட்டமைப்புக்குள் தமிழ் உணர்வாளர்கள் ஒருவரும் இல்லை. இதனை அறிந்துதான் நான் ஒரு தமிழ் கட்சியை ஆரம்பித்திருக்கின்றேன்.தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு விலைபோய்விட்டது. ஆனால் தற்போது அக்கூட்டமைப்பிலுள்ளவர்கள், கோடீஸ்வரர்களாக இருந்து மாளிகைகளை கட்டிக்கொண்டுள்ளார்கள்.
நாங்கள் போராடியபோது அந்தப் போராட்டத்திற்கு பயந்து தப்பி ஓடிய அரியநேத்திரன், இராணுவத்திற்குக் காட்டிக் கொடுத்த யோகேஸ்வரன், போன்றோர் மாவீரர்களுக்கு அஞ்சலி செலுத்துகின்றார்கள். இதனைச் செய்வதற்கு அவர்களுக்கு என்ன தகுதி இருக்கின்றது அவர்களுக்கு.இரத்த ஆற்றை ஓட வைத்தவன் நான் ஆனால் வடக்கு கிழக்கு இணைந்தால் இரத்த ஆறு ஓடும் என தெரிவித்துள்ள அமைச்சர் ஹிஸ்பல்லாவுக்கு இது தெரியுமா? எனவும் அவர் கேள்வியெழுப்பினார்.

Get real time updates directly on you device, subscribe now.

You might also like