பிறந்தநாளுக்கு சேர்த்து வைத்த பணம்… கொரோனா நிவாரண நிதிக்கு அனுப்பிய 3ம் வகுப்பு சிறுமி! எவ்வளவு தெரியுமா?

கடலூர் மாவட்டம் சிதம்பரத்தைச் சேர்ந்த 3 ஆம் வகுப்பு மாணவி தனது பிறந்த நாளுக்காகச் சேமித்து வைத்திருந்த உண்டியல் பணத்தை கோரோனா நிவாரண நிதிக்கு அனுப்பிவைத்துள்ளார்.

கொரோனா வைரஸ் உலக நாடுகளை அச்சுறுத்திக் கொண்டிருக்கும் நிலையில், இந்தியாவிலும் அதன் தாக்கம் அதிகரித்துள்ளது. மத்திய, மாநில அரசுகள் கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை முடுக்கி விட்டுள்ளது.

இந்நிலையில் பிரதமர் நரேந்திர மோடியும், பல்வேறு மாநில முதலமைச்சர்களும் கொரோனா தடுப்பு நடவடிக்கைகளுக்கு தங்களால் முடிந்த உதவிகளை செய்யுமாறு பொதுமக்களிடத்தில் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

இதனை தொடர்ந்து நாடு முழுவதுமுள்ள தொழிலபதிர்கள், நடிகர்கள், பொதுமக்கள், எம்.எல்.ஏ, எம்.பிகள் என ஏராளமானோர் பிரதமர் நிவாரண நிதிக்கும், மாநில முதலமைச்சர்களின் பேரிடர் நிவாரண நிதிக்கும் நிதி அளித்து வருகின்றனர்.

இந்நிலையில் கடலூர் மாவட்டம் சிதம்பரம் அருகே உள்ள உசுப்பூர் கிராமத்தைச் சேர்ந்த 3 ஆம் வகுப்பு மாணவி கௌசிகா, தனது பிறந்த நாளுக்காக சிறிது சிறிதாக சேர்த்து வைத்திருந்த உண்டியல் பணம் ரூபாய் 1,555ஐ முதலமைச்சரின் பேரிடர் நிவாரண நிதிக்கு அனுப்பி வைத்துள்ளார்.

கௌசிகா தனது தந்தையிடம் தான் சேமித்து வைத்திருந்த பணத்தைக் கொடுத்து கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவி செய்ய, முதலமைச்சரின் நிவாரண நிதிக்கு அனுப்பி வைக்குமாறு கூறியுள்ளார். இதனையடுத்து கொசிகாவின் தந்தை ராஜபிரபு நெட் பேங்கிங் மூலம் அந்த பணத்தைச் சென்னை தலைமைச் செயலகத்துக்கு அனுப்பி வைத்துள்ளார். சிறுமியின் இந்த செயலை சமூக ஆர்வலர்களும், பொதுமக்களும் வெகுவாக பாராட்டி வருகின்றனர்.