இலங்கையில் நாளைய ஊரடங்கு தளர்த்தல் தொடர்பான பொலிஸ் தலைமையகம் முக்கிய அறிவித்தல்!

கொழும்பு, கம்பஹா, களுத்துறை, புத்தளம் , கண்டி மற்றும் யாழ்ப்பாணம் உள்ளிட்ட மாவட்டங்களில் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ள பொலிஸ் ஊரடங்குச் சட்டம் தொடர்ந்தும் நடைமுறையிலிருக்கும்.

ஏனைய அனைத்து மாவட்டங்களிலும் நாளை புதன்கிழமை (01.04.2020) காலை 6 மணிக்கு ஊரடங்கு சட்டம் தற்காலிகமாக நீக்கப்பட்டு மீண்டும் பிற்பகல் 2 மணிக்கு நடைமுறைப்படுத்தப்படவுள்ளது.

ஊரடங்கு சட்டம் தொடர்பில் பொலிஸ் தலைமையகம் மேலும் தெரிவித்துள்ளதாவது :

அத்தியாவசிய சேவைகள் தவிர்த்து ஏனைய எந்தவொரு தேவைக்காகவும் மாவட்டங்களுக்கிடையிலான போக்குவரத்து முற்றாக தடைசெய்யப்பட்டுள்ளது.

அதற்கமைய அத்தியாவசிய சேவைகள் தவிர்ந்த சட்ட விரோதமான முறையில் செயற்படுபவர்களுக்கு எதிராக சட்டம் கடுமையாக அமுல்படுத்தப்படும் என்று பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது.

கொரோனா வைரஸ் பரவலை நாட்டிலிருந்து முற்றாக ஒழிப்பதற்கு எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகளுக்கு முழுமையான ஒத்துழைப்பை வழங்குமாறு பொலிஸ் தலைமையகம் மக்களிடம் கேட்டுக் கொள்கிறது.

களுத்துறை மாவட்டத்தில் அட்டலுகம கிராமம் மற்றும் கண்டி மாவட்டத்தில் அக்குரணை கிராமம் என்பன முழுமையாக முடக்கப்பட்டுள்ள பிரதேசங்களாக அடையாளப்படுத்தப்பட்டுள்ளன.

எந்த சந்தர்ப்பத்திலும் இவ்விரு கிராமங்களுக்கும் செல்வதோ அல்லது அந்த கிராமத்திலிருந்து வெளியேறுவதோ முற்றாக தடை செய்யப்பட்டுள்ளது.