இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்ட நிலையில், உயிரிழந்த 2வது நபர் பங்கேற்ற திருமண நிகழ்வில் கலந்துகொண்ட 150 பேரை அடையாளம் காணும் நடவடிக்கையில் பொலிஸார், இராணுவத்தினர் மற்றும் சுகாதார அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர்.
இந்நிலையில், யாழ்ப்பாணத்தின் உஸ்மானியா கல்லூரி பகுதியில் நேற்று தேடுதல் நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனிடையே, யாழ். போதனா வைத்தியசாலையில், ஆறு பேர் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும், அவர்களில் ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாகவும், யாழ். போதனா வைத்தியசாலையின் பணிப்பாளர் வைத்தியர் சத்தியமூர்த்தி தெரிவித்துள்ளார்.
கொழும்பு ஆங்கில ஊடகம் ஒன்றிடம் அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.
கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்ட நிலையில் நேற்று முன்தினம் நீர்கொழும்பு பகுதியை சேர்ந்த ஒருவர் உயிரிழந்தார். இவர் கொரோனா தொற்றினால் இலங்கையில் உயிரிழந்த இரண்டாவது நபர் ஆவார்.
அண்மையில் யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற திருமண நிகழ்வு ஒன்றில் அவர் கலந்துகொண்டிருந்தார்.
இதனையடுத்து அவர் யாழ்ப்பாணத்தில் தங்கியிருந்த இடங்களை பொலிஸார், இராணுவம் மற்றும் சுகாதார அதிகாரிகள் சோதனை செய்தனர்.
குறித்த நபர் உயிரிழந்த உடனேயே, குற்றப் புலனாய்வுத்துறை அதிகாரிகள் மற்றும் பிற அதிகாரிகள் மார்ச் 30ம் திகதி மாலை முதல் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
யாழ்ப்பாணத்தில் உள்ள ஐந்து சந்தி பகுதியில் நேற்று தேடுதல் நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டன.
இதனையடுத்து, பெரும் சிரமங்களுக்கு மத்தியில், திருமண நிகழ்வில் கலந்து கொண்ட 120 பேரின் விபரங்களை அதிகாரிகள் கண்டுபிடித்துள்ளனர்.
அத்துடன், உயிரிழந்த நபர் தங்கியிருந்த இடங்களின் விபரங்கள் மற்றும் அவர் சந்தித்த நபர்களின் பட்டியல் தயாரிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, கொரோனா வைரஸ் பரவல் குறித்து ஆபத்தான பகுதியாக யாழ்ப்பாணம் மாவட்டம் அடையாளப்படுத்தப்பட்டுள்ள நிலையில், அங்கு மறு அறிவித்தல் வரை ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.






