ஊழல் வாதிகளின் கரங்களில் இருக்கும் அதிகாரங்களை மீட்டெடுப்போம்.

 நாம் எதிர்கொள்ளும் இத்தேர்தல் எமது பகுதி மக்களின் அபிவிருத்திக்கான அதிகாரங்களை பெறுவதற்கான மக்களது ஆணையாகும்.
இதனை கருத்திற்கொண்டு நிதானமாக வாக்குகளை பிரயோகிக்க வேண்டிய தேவை எமது மக்களாகிய உங்களுக்கு இருக்கிறது.

எமக்குரிய அதிகாரங்களை, வளங்களை ஊழல் அரசியல்வாதிகளிடம் கொடுத்து எமது பகுதியின் முன்னேற்றங்களை மட்டுப்படுத்தி பாழ்படுத்தி விட முடியாது.

ஆகவே மோசடிக்காரர்களிடமிருந்து மிகவும் அவதானமாகச் செயற்படுமாறு உங்களிடம் வேண்டுகோள் விடுக்க விரும்புகிறோம்.

இவ்வாறு வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும் மாவட்ட அபிவிருத்திக் குழு இணைத் தலைவருமான கெளரவ மஸ்தான் காதர் தெரிவித்தார்.

மாந்தை மேற்கு பிரதேச சபையின் நெடுங்கண்டல் வட்டாரத்தில் போட்டியிடும் கெளரிபாலன் மற்றும் செல்வி நிவேதா ஆகியோரை ஆதரித்து இன்று இடம்பெற்ற பொதுக்கூட்டத்தில் உரை நிகழ்த்துகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.


அவர் தனதுரையில் மேலும் குறிப்பிட்டதாவது

எமக்கெதிராகவோ அல்லது எமது கட்சித் தலைவரான மாண்புமிகு ஜனாதிபதிக்கெதிராகவோ யாரும் குற்றச்சாட்டுகளை முன்வைப்பது கிடையாது.
காரணம் எமது கைகள் சுத்தமானவை என்பதை யாவரும் நன்கறிவர்.

அரச மற்றும் பொது வளங்களை சூறையாடுபவர்களை இந்தத்தேசமும் மக்களும் அங்கீகரிக்கமாட்டார்கள் என்பதை கருத்திற்கொண்டு நேர்மையான அரசியலை செய்வதற்கு எமக்கு அவர்கள் வழிவிடவேண்டும் என சம்பந்தப்பட்டவர்களை கேட்டுக் கொள்ள விரும்புகிறேன்.

கடந்த தேர்தலில் இந்தப் பிரதேசங்களின் அதிகாரங்களை தமது கரங்களில் வைத்திருந்தவர்கள் அந்த அதிகாரங்களை எப்படிப் பாவித்தார்கள் எத்தனை வீதிகள் புனரமைத்தார்கள்,மக்களுக்கு தேவையான எத்தனை கட்டங்களை நிர்மாணித்தார்கள் என்ற கேள்விகளெல்லாம் விடைகளின்றி தொக்கி நிற்கும் சூழ்நிலையில் தான் இந்த வட்டாரத் தேர்தலுக்கு நாங்கள் முகங்கொடுக்கிறோம்.

ஆகவே கடந்தகால தவறுகளை இம்முறையும் செய்துவிடாமல் இந்தத் தேசத்தின் தலைமைப் பொறுப்பை கரங்களில் வைத்திருக்கும் எமது ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சிக்கு வாக்களிக்கும்படி உங்களை உரிமையோடு கேட்டுக் கொ‌ள்கின்றேன்.

ஏனென்றால் நாம் சேவை செய்வதற்காகவே அரசியலுக்குள் நுழைந்தவர்கள்.
எமக்கு பணத்தை உழைப்பதற்கு அரசியலில் நுழையவேண்டிய எந்தத் தேவையுமில்லை.

இந்த அதிகாரங்களை தமது கைகளில் வைத்திருப்பவர்கள் ஆடுகின்ற ஆட்டங்களையும் செய்கின்ற அடாவடித் தனங்களையும் நாம் அறிந்திருக்கின்றோம்.

இவற்றை கண்டு நாம் அசந்து பின்வாங்கப் போவதில்லை.எமது மக்களினதும் நாட்டினதும் வளங்களை துஷ்பிரயோகம் செய்வதற்கு இனி யாருக்கும் நாம் இடமளிக்கவும் போவதில்லை என்பதை உரியவர்களுக்கு வெளிப்படையாக கூறி வைக்க விரும்புகிறேன்.

ஆகவே இந்த முறை மாந்தை மேற்கு பிரதேச சபையின் அதிகாரங்களை எமது ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சிக்கு வழங்கி இந்த பிரதேசத்தின் எதிர்காலத்தை நீங்கள் ஒளிமயமாக்குங்கள் எனவும் குறிப்பிட்டார்.
ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்ட மேற்படி கூட்டத்தில் வேட்பாளர்கள் கெளரிபாலனும் செல்வி நிவேதாவும் உரைநிகழ்த்தியமை குறிப்பிடத்தக்கது.