கொரோனா வைரஸின் புதிய வகை பதிப்பு குறித்து சீன ஆராய்ச்சியாளர்கள் எச்சரிக்கை!

கிட்டத்தட்ட இரண்டு மாதங்கள் வரை மக்களை பாதிக்கக்கூடிய கொரோனா வைரஸின் புதிய வகை பதிப்பு குறித்து சீன ஆராய்ச்சியாளர்கள் எச்சரித்துள்ளனர்.

சமீபத்தில் சீன இராணுவ ஆராய்ச்சியாளர்கள் 49 நாட்களுக்கும் மேலாக கொரோனா நோயால் பாதிக்கப்பட்ட ஒரு நடுத்தர வயது மனிதரைக் கண்டுபிடித்தனர்.

இது பொதுவாக கொரோனாவால் பாதிப்புக்கு உள்ளான நோயாளிகளிடம் இருந்தது இல்லை எனவும் ஆய்வாளர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

தற்போது அந்த நோயாளிக்கு பிளாஸ்மா பரிமாற்ற முறைப்படி சிகிச்சை அளிக்கப்பட்டதாக சீன இராணுவ ஆராய்ச்சியாளர்கள் தெரிவிக்கின்றனர்.

முந்தைய ஆய்வுகளில், கொரோனாவால் பாதிக்கப்பட்ட நோயாளிகள் 20 நாட்களில் அல்லது 37 நாட்களில் குணமடைந்துள்ளதாக தெரியவந்தது.

ஆனால் குறித்த சீனத்து நோயாளிக்கு லேசான அறிகுறிகள் மட்டுமே காணப்பட்டதாகவும், 49 நாட்களுக்கும் மேலாக அவர் கொரோனாவால் பாதிக்கப்பட்டிருந்ததும் தெரியவந்தது.

மேலும், குறித்த நோயாளியின் முதியவரான உறவினர் ஒருவருக்கும் கொரோனா பாதிக்கப்பட்டிருந்ததாகவும், ஆனால் அவர் விரைவில் குணமானதாகவும் கூறப்படுகிறது.

இதனால் தற்போது கண்டறியப்பட்ட கொரோனாவின் பதிப்பானது பரவக்கூடியது அல்ல, மாறாக குணப்படுத்த முடியாதது என ஆராய்ச்சியாளர்கள் எச்சரித்துள்ளனர்.

மேலும், லேசான அறிகுறிகளால் சிகிச்சையளிக்கப்படாத பிற “நாள்பட்ட” நோயாளிகள் தொடர்ந்து தொற்றுநோயைப் பரப்பி, புதிய பாதிப்பை ஏற்படுத்தக்கூடும் என்று அவர்கள் எச்சரித்துள்ளனர்.