14 நாட்களுக்குள் ஊரடங்கை மீறிய 11, 019 பேர் கைது : 2,727 வாகனங்கள் பறிமுதல்

கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்துவதற்காக அமுல்படுத்தப்பட்ட ஊரடங்குச் சட்டத்தை மீறி செயற்பட்டதாக 14 நாட்களுக்குள், 11,019 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இவர்களிடமிருந்து 2,727 வாகனங்களும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.

கொவிட் – 19 வைரஸ் பரவலை கட்டுப்படுத்துவதற்காக நாடளாவிய ரீதியில் கடந்த மார்ச் மாதம் 20 ஆம் திகதி வெள்ளிக்கிழமை மாலை 6 மணிமுதல் பொலிஸ் ஊரடங்குச்சட்டம் அமுல்படுத்தப்பட்டது.

இந்நிலையில் மக்கள் தமது அத்தியாவசிய தேவைகளை நிறைவேற்றிக் கொள்வதற்காக சிறு காலவகாசம் வழங்கப்பட்டு வருகின்றது.

இவ்வாறு எட்டு மணித்தியாலம் கால அவகாசம் வழங்கப்பட்டு மீண்டும் ஊரடங்கு நீடிக்கப்பட்டு வருகின்றது.

இதேவேளை யாழ்ப்பாணம் மற்றும் கொழும்பு ,கம்பஹா,களுத்துறை , கண்டி ,புத்தளம் ஆகிய மாவட்டங்களுக்கு மீள் அறிவித்தல் வரை ஊரடங்கு அமுல்படுத்தப்பட்டுள்ளதுடன், சில பகுதிகள் முற்றகாக முடக்கப்பட்டுள்ளன.

இதன்போது ஊரடங்கு சட்டத்திற்கு புறம்பாக செயற்படுபவர்களை கைது செய்வதாக பொலிஸார் அறிவித்திருந்த போதும் சிலர் அதனை கருத்திற் கொள்ளாது செயற்பட்டு வருகின்றனர். இது போன்ற நபர்கள் தொடர்பில் கவனம் செலுத்தியுள்ள பொலிஸார்.

இதுவரையில் 11 ஆயிரத்துக்கும் அதிகமானோரை கைது செய்துள்ளனர். இதேவேளை சந்தேக நபர்களுக்கு எதிரான சட்ட நடவடிக்கைகளும் பலப்படுத்தப்பட்டுள்ளன.

அதற்கமைய இன்று வெள்ளிக்கிழமை காலை 6 மணிமுதல் பிற்பகல் 12 மணிவரையான 6 மணித்தியாலயத்திற்குள் மாத்திரம் 289 பேர் கைது செய்யப்பட்டுள்ளதுடன், அவர்களிடமிருந்து 70 வாகனங்களும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

இவ்வாறான கைதுகள் வைரஸ் பரவல் தொடர்பில் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ள பகுதிகளான கம்பஹா, நீர்க்கொழும்பு, களனி, பாணந்துறை, புத்தளம் மற்றும் யாழ்ப்பாணம் ஆகிய பகுதிகளிலே அதிகளவில் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

ஊரடங்குச் சட்டம் அமுல்படுத்தப்பட்டு கடந்துள்ள 14 நாட்களுக்குள் மாத்திரம் 11ஆயிரத்து 19 பேர் கைது செய்யப்பட்டுள்ளதுடன், இவர்களிடமிருந்து மோட்டார் சைக்கிள் ,கார், முச்சக்கர வண்டி மற்றும் சொகுசு வாகனங்கள் உள்ளிட்ட 2,727 வாகனங்கள் கைப்பற்றப்பட்டுள்ளன.

இவ்வாறு பறிமுதல் செய்யப்படும் வாகனங்களை பொலிஸார் பொறுப்பேற்பதுடன், அதனை வைரஸ் தொற்று கட்டுபாட்டுக்குள் கொண்டுவரப்பட்டதன் பின்னரே கையளிக்கப்படும்.

இதேவேளை குறித்த வாகனங்களை தொற்று நீக்கம் தொடர்பான போக்குவரத்து செயற்பாடுகளுக்கும் பயன்படுத்தப்பட்டு வருவதாகவும் பதில் பொலிஸ் மா அதிபர் தெரிவித்திருக்கிறார். அதற்கமைய பிரதான வீதிகள் மாத்திரமின்றி கிளை வீதிகளிலும் சோதனனகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.