யாழில் வெளியான விளம்பரத்தை பார்த்து கோபமடைந்த பிரதமர்

யாழ்ப்பாணத்தில் வெளியாகும் பத்திரிகையொன்றில் வெளியிடப்பட்டிருந்த விளம்பரத்தை பார்த்து பிரதமர் மஹிந்த ராஜபக்ச கோபமடைந்துள்ளதாக தெரியவருகிறது.

கட்சி தலைவர்கள் கூட்டமானது நேற்றைய தினம் இடம்பெற்றிருந்தது. இதில் வைத்தே குறித்த விளம்பரம் தொடர்பில் பிரதமர் கடுமையான விமர்சனங்களை முன்வைத்துள்ளார்.

கிறிஸ்தவ மதபோதனை ஒன்று தொடர்பாக யாழ்ப்பாணத்திலிருந்து வெளியாகும் பத்திரிகையொன்று விளம்பரம் செய்துள்ளது.

கொரோனா உங்களை நெருங்காது என்ற அந்த விளம்பரத்தில் இலக்கம் – 14 ராசாவத்தை, சுதுமலை வீதி, மானிப்பாய் பகுதியில் இடம்பெறும் ஜெபக்கூட்டத்திற்கு வருமாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பில் பிரதமர் கூறுகையில்,

நாம் அனைவரும் பொறுப்புடன் செயற்பட வேண்டும். எனது கைகளில் இந்த விளம்பரம் கிடைத்தது.

ஜெபக்கூட்டம் ஒன்றுக்கு வருமாறு கூறப்பட்டுள்ளது. வடக்கில் பத்திரிகைகளில் இப்படியான விளம்பரங்களை வெளியிட அனுமதிக்க வேண்டாம்.

குறிப்பாக உங்களிடம் கோரிக்கை விடுக்கின்றேன். பத்திரிகை உரிமையாளர் யார் என்று எனக்கு தெரியாது, நீங்கள் அவருக்கு ஆலோசனை வழங்குங்கள் என்று குறிப்பிட்டுள்ளார்.