யாழில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பேருக்கு கொரோனா தொற்று – தாய், மகன், மகள் பாதிப்பு

யாழ்ப்பாணத்தில் நேற்று அடையாளம் காணப்பட்ட கொரோனா நோயாளிகள் ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் என தெரியவந்துள்ளது.

அரியாலை பகுதியில் ஒரே குடும்பத்தை சேர்ந்த தாய், மகன், மகள் கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளமை உறுதி செய்யப்பட்டுள்ளதாக யாழ். போதனா வைத்தியசாலை தகவல்கள் தெரிவிக்கின்றன.

அரியாலையில் போதனை நடத்திய சுவிஸ் மதகுருவுடன் கூடிய தொடர்புகளைப் பேணியவர்களுக்கே கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது.

குறித்த போதகரின் கூட்டத்தில் கல்து கொண்டவர்களை பலாலிப் பகுதியில் தனிமைப்படுத்தி வைக்கப்பட்டுள்ளது. அவர்களில் 10 பேரின் பரிசோதனை மாதிரிகள் எடுக்கப்பட்டன.

அவர்களில் மூன்று பேருக்கு கொரோனா வைரஸ் தொற்றியுள்ளமை உறுதி செய்யப்பட்டுள்ளதாக யாழ். போதான வைத்தியசாலையின் பணிப்பாளர் வைத்தியர் த.சத்தியமூர்த்தி தெரிவித்துள்ளார்.

தற்போது அவர்களுடைய உடல்நிலை சாதாரணமாகவே காணப்படுகின்றது. இருப்பினும், மேலதிக சிகிச்சை அளிக்கும் முகமாக அம்புலன்ஸ் மூலம் வெலிகந்த விசேட வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்படவுள்ளனர்.

இதேவேளை இலங்கையில் இனம் காணப்பட்ட மொத்த கொரோனா நோயாளர்களின் எண்ணிக்கை 159 ஆக உயர்ந்துள்ளது. இதில் யாழ்ப்பாணத்தை சேர்ந்த 7 பேரும் அடங்கும்.

குறித்த ஏழு நோயாளிகளும் சுவிஸ் போதகரின் போதனை கூட்டத்தில் கலந்து கொண்டவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.