தபால் மூலம் வாக்களிக்கத் தவறிய அரச ஊழியர்களுக்கு தேர்தல் ஆணையகத்தின் முக்கிய அறிவித்தல்

உள்ளூராட்சித் தேர்தலில் தபால் மூலம் வாக்களிக்க விண்ணப்பித்து விட்டு வாக்களிக்காதவர்களிடம், அதற்கான செலவுத் தொகையை அறவிடுவது குறித்து தேர்தல்கள் ஆணைக்குழு ஆலோசனை நடத்தி வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கொழும்பில் ஊடகவியலாளர்கள் மத்தியில் கருத்து தெரிவித்த தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய இதனை தெரிவித்துள்ளார்.தபால் மூலம் வாக்களிக்க விண்ணப்பித்து, அதற்கு தகைமை பெற்ற 4 ஆயிரம் வாக்காளர்கள் இதுவரை வாக்களிக்கவில்லை என சுட்டிக்காட்டிய அவர், தபால் மூல வாக்களிப்பிற்கான இன்றைய இறுதி சந்தர்ப்பத்தை அவர்கள் பயன்படுத்திக் கொள்வார்கள் என நம்புவதாகவும் குறிப்பிட்டார்.
ஒவ்வொரு அஞ்சல் வாக்குகளுக்கும், அரசாங்கத்துக்கு 750 ரூபா வரை செலவாவதாக தெரிவித்த அவர், அரச பணியாளர்கள் பொறுப்புடன் செயற்பட்டு வாக்களிக்காவிட்டால், அதற்கு ஏற்படும் செலவை அறவிடுவதற்கான ஏற்பாடுகள் இருக்க வேண்டும் என்றும் தெரிவித்தார்.எனவே, வாக்களிக்காத அரச பணியாளர்களிடம் விளக்கம் கோரவும், செலவுத் தொகையை அறவிடவும் தேர்தல் ஆணைக்குழு முடிவு செய்துள்ளதாகவும் கூறினார்.
மேலும், தபால் வாக்குகள் ஏற்கனவே எண்ணி முடிக்கப்பட்டு விட்டதாக பரப்பப்படும் வதந்திகளில் உண்மையில்லை என்றும் எதிர்வரும் பெப்ரவரி 10ஆம் திகதி மாலை 4 மணிக்குப் பின்னர் அவை எண்ணப்படும் எனவும் தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய மேலும் தெரிவித்துள்ளார்.

Get real time updates directly on you device, subscribe now.

You might also like