அநுராதபுர அரசியல் கைதிகள் அநுராதபுரம் மேல் நீதிமன்றிலிருந்து வவுனியா மேல் நீதிமன்றுக்கு மாற்றம் (வீடியோ)

அநுராதபுரம் சிறையில் தடுத்துவைத்துள்ள அரசியல் கைதிகள் மூவருக்கு எதிரான வழக்கு விசாரணையை அநுராதபுரம் மேல் நீதிமன்றிலிருந்து வவுனியா மேல் நீதிமன்றுக்கு மாற்றப்படுவதாக சட்டமா அதிபரால் கொழும்பு மேன்முறையீட்டு நீதிமன்றுக்கு இன்று அறிவிக்கப்பட்டது.
அநுராதபுரம் சிறைச்சாலையில் உணவு ஒறுப்பில் ஈடுபட்ட அரசியல் கைதிகள் மூவரின் சார்பாக அவர்களுக்கு எதிரான வழக்கு விசாரணையை அநுராதபுரத்திலிருந்து வவுனியாவுக்கு மாற்றக் கோரி கொழும்பு மேன்முறையீட்டு நீதிமன்றில் மீளாய்வு மனு சமர்ப்பிக்கப்பட்டிருந்தது.

இந்த மனு கடந்த செப்ரெம்பர் மாதம் 26ஆம் திகதி தாக்கல் செய்யப்பட்டது.
அதன்போது சட்டமா அதிபர் சார்பாக முன்னிலையான அரச சட்டத்தரணி அரசியல் கைதிகள் மூவருக்கும் எதிரான சாட்சிகளாக மூன்று சாட்சிகள் காணப்படுகின்றனர். சாட்சிகள் மூவரும் வவுனியா மேல் நீதிமன்றுக்கு சாட்சியளிக்க வருவதில் தமக்கு பாதுகாப்பு அச்சுறுத்தல் இருப்பதாக கூறியதன் காரணமாகவே இந்த வழக்கு அநுராதபுரம் மேல் நீதிமன்றுக்கு மாற்றப்பட்டது. 
எனவே சாட்சிகளுடன் தொடர்பு கொள்வதற்குரிய கால அவகாசத்தை வழங்குமாறு அரச சட்டத்தரணி மேன்முறையீட்டு நீதிமன்றில் கோரியிருந்தார்.
இதனால் அந்த மனு மீதான விசாரணை இன்றுவரை மேன்முறையீட்டு நீதிமன்றால் ஒத்திவைக்கப்பட்டிருந்தது. அந்த மனு இன்றைய தினம் மீளவும் விசாரணைக்கு எடுத்துகொள்ளப்பட்டது.
இதன்போது சமூகமளித்திருந்த சட்டமா அதிபர் சார்பான அரச சட்டத்தரணி,
மதியரசன் சுலக்சன், கணேசன் தர்சன் மற்றும் இராசதுரை திருவருள் ஆகியோரின் வழக்கு விசாரணைகள் அநுராதபுரம் மேல் நீதிமன்றிலிருந்து வவுனியா மேல் நீதிமன்றுக்கு மீளவும் மாற்றப்படும் என்று மன்றுக்கு அறிவித்தார்.
மேன்முறையீட்டு நீதிமன்றம் மனு மீதான விசாரணையை முடிவுறுத்திக் கட்டளையிட்டது.
பின்னணி
2009ஆம் ஆண்டு காலப்பகுதியில் வவுனியா மேல் நீதிமன்ற நியாதிக்க எல்லையான புதுக்குடியிருப்பு வள்ளிபுனம் இடைக்கட்டு பகுதியில் 18 கடற்படை சிப்பாய்களுக்கும், 8 இராணுவச் சிப்பாய்களுக்கும் உயிரிழப்பை விளைவித்தனர் என்று தெரிவித்து பயங்கரவாத தடைக் கட்டளைச்சட்டத்தின் கீழ் இராசதுரை திருவருள், மதியரசன் சுலக்சன், கணேசன் தர்சன் ஆகிய மூவரும் கைது செய்யப்பட்டனா். 
அவா்களில் ம. சுலக்சன், க. தர்சன் ஆகிய இருவருக்கும் எதிராக 2013ஆம் ஆண்டு ஜூன் மாதம் 25ஆம் திகதி வவுனியா மேல் நீதிமன்றத்தில் சட்டமா அதிபரால் குற்றப்பகிா்வுப் பத்திரம் தாக்கல் செய்யப்பட்டது.
முதலாம் எதிரியான இராசதுரை திருவருள் என்பவரை இந்த வழக்கிலே சேர்த்து 2017ஆம் ஆண்டு ஜூன் மாதம் 12ஆம் திகதி வவுனியா மேல் நீதிமன்றில் சட்டமா அதிபரால் குற்றப்பகிர்வுப் பத்திரம் தாக்கல் செய்யப்பட்டது