புத்தாண்டு நிறைவுறும்வரை கோரோனா ஒழிப்புக்கான தற்போதைய கட்டுப்பாட்டுக்கள் தொடரும் – ஜனாதிபதி தலைமையிலான கூட்டத்தில் இணக்கம்

புத்தாண்டு நிறைவுறும் வரை கோரோனா ஒழிப்பு தற்போதைய நிகழ்ச்சித்திட்டத்தை முன்னெடுத்துச் சென்று பின்னர் நிலமையை ஆராய்ந்து அடுத்த கட்ட நடவடிக்கை குறித்து தீர்மானிக்க கலந்துரையாடப்படும். அத்துடன், கோரோனா நோயாளிகள் இனங்காணப்படாத மாவட்டங்களில் நோய் பரவும் அச்சுறுத்தல் தற்போது இல்லை. எதிர்வரும் புத்தாண்டு காலம் நிறைவுறுவதுடன் இடர் நிலைமை இல்லாத மாவட்டங்களில் தற்போது நடைமுறையிலுள்ள கட்டுப்பாடுகளை நீக்கக்கூடிய வாய்ப்பு உள்ளது.

இவ்வாறு ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ச தலைமையில் இடம்பெற்ற இன்றைய கூட்டத்தில் இணக்கம் காணப்பட்டது.

இதுதொடர்பில் ஜனாதிபதி ஊடகப் பிரிவு அனுப்பிவைத்த செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது;

கொவிட் 19 என்னும் கோரோனா வைரஸ் நாட்டினுள் பரவுவதை கட்டுப்படுத்துவதற்காக அரசால் நடைமுறைப்படுத்தியுள்ள நிகழ்ச்சித்திட்டங்களின் முன்னேற்றத்தை மீளாய்வு செய்து அடுத்த கட்ட நடவடிக்கைகள் குறித்து தீர்மானிப்பதற்கான கலந்துரையாடல் ஒன்று ஜனாதிபதி கோத்தாய ராஜபக்ச தலைமையில் இன்று (04) ஜனாதிபதி அலுவலகத்தில் இடம்பெற்றது.

கோரோனா நோயாளிகள் அதிகம் கண்டறியப்பட்டுள்ள சில மாவட்டங்கள் தவிர பெரும்பாலான மாவட்டங்களில் நோய் பரவும் அச்சுறுத்தல் தற்போது இல்லை. எதிர்வரும் புத்தாண்டு காலம் நிறைவுறுவதுடன் இடர் நிலைமை இல்லாத மாவட்டங்களில் தற்போது நடைமுறையிலுள்ள கட்டுப்பாடுகளை நீக்கக்கூடிய வாய்ப்பு உள்ளது.

எனவே புத்தாண்டு நிறைவுறும் வரை கோரோனா ஒழிப்பு தற்போதைய நிகழ்ச்சித்திட்டத்தை முன்னெடுத்துச் சென்று பின்னர் நிலமையை ஆராய்ந்து அடுத்த கட்ட நடவடிக்கை குறித்து தீர்மானிக்க கலந்துரையாட இணக்கம் காணப்பட்டது.

ஜனாதிபதி அவர்களின் தலைமையில் அரசு இதுவரையில் செயற்பட்டதைப் போன்று வைரஸை ஒழிக்க தொடர்ந்தும் சுகாதார, மருத்துவ, பாதுகாப்பு மற்றும் சட்டம் உள்ளிட்ட குறித்த துறைகளின் நிபுணர்களின் ஆலோசனைகள் மற்றும் பரிந்துரைகளின் அடிப்படையில் தீர்மானங்கள் மேற்கொள்ளப்படும் – என்றுள்ளது.

இதேவேளை, தமிழ், சிங்களப் புத்தாண்டு வரும் 13ஆம் திகதி திங்கட்கிழமை என்பது குறிப்பிடத்தக்கது.