கொரோனா நோயாளிகளுக்காக இலங்கை மாணவி கண்டுபிடித்த மெத்தை

கொரோனா வைரஸ் தொற்றினால் பாதிக்கப்படும் நோயாளிகளுக்காக இலங்கை மாணவி ஒருவர் மெத்தை ஒன்றை தயாரித்துள்ளார்.

களுத்துறை – நாகொட தேசிய சுகாதார அறிவியல் நிறுவனத்தில் முதலாம் ஆண்டு தாதி மாணவியே இந்த அபூர்வ மெத்தையை தயாரிக்கும் நடவடிக்கை மேற்கொண்டுள்ளார்.

கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை வழங்கும் போது ஒரே நாளில் பல நோயாளியை அடுத்த பக்கம் திருப்ப வேண்டும். எனினும் அது ஆபத்தான நடவடிக்கை என்பதனால் தூரத்தில் இருந்து ரிமோட் ஊடாக நோயாளிகளை கையாளும் மெத்தை ஒன்றை குறித்த மாணவி தயாரித்துள்ளார்.

அண்மையில் கொரோனா தொற்றில் இருந்து பாதுகாத்துக் கொள்வதற்காக தொடர்ந்து கை கழுவுவதற்காக ரிமோட் ஊடாக பாதுகாப்பாக நீர் வழங்கும் திட்டம் ஒன்று உருவாக்கப்பட்டது. இந்த செயல்முறையை உருவாக்கிய மத்துகம கீதா நந்த உதயசிறியின் மகளான சந்தலி நிப்மா என்ற மாணவி, தனது தந்தை மற்றும் சித்தப்பாவின் உதவியுடன் இந்த மெத்தையை தயாரித்துள்ளார்.

தூரத்தில் இருந்து கட்டுப்படுத்தும் ரிமோட் ஊடாக நோயாளியை பக்கம் திருப்புல், நேராக நிமிர்த்துதல் உட்பட பல செயல்முறைகளை இந்த மெத்தையின் மூலம் மேற்கொள்ள முடியும்.

தூரத்தில் இருந்து கட்டுப்படுத்தும் ரிமோட் ஊடாக இயக்கும் மெத்தை ஒன்று இதுவரையில் தயாரிக்கப்படவில்லை. இந்த தயாரிப்பிற்கு தேவையான உதவிகளை வழங்கினால் சர்வதேச மட்டத்தில் இதனை தயாரிக்க முடியும் என குறித்த மாணவி குறிப்பிட்டுள்ளார்.