விஜயகாந்த் உள்ளிட்ட நால்வருக்கு எதிரான தீர்ப்பு மார்ச் 8வரை தள்ளிவைப்பு

யாழ்ப்பாணம் மாநகர சபையின் முன்னாள் உறுப்பினரும் முற்போக்கு தமிழ் தேசியக் கட்சியின் செயலாளருமான சுதர்சிங் விஜயகாந்த் உள்ளிட்ட நால்வருக்குமான தண்டனைத் தீர்ப்பை வரும் மார்ச் 8ஆம் திகதிவரை யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றம் இன்று ஒத்திவைத்தது.
2013ஆம் ஆண்டு ஜூலை மாதம் வங்கியொன்றில் அடகு வைப்பதற்கு சுதர்சிங் விஜயகாந்த் சென்றிருந்தார். அந்த வங்கியில் கடமையாற்றும் அலுவலகரின் திருட்டுப் போன நகை சுதர்சிங் விஜயகாந்திடம் காணப்பட்டது. அதுதொடர்பில் கோப்பாய் பொலிஸாருக்கு அறிவிக்கப்பட்டது.
சம்பவம் தொடர்பில் விசாரணைகளை முன்னெடுத்த யாழ்ப்பாணம் பொலிஸார், விஜயகாந்த் உள்ளிட்ட 4 பேரைக் கைது செய்தனர். தொடர்ச்சியாக விளக்கமறியலில் வைக்கப்பட்ட சந்தேகநபர்கள் நான்கு பேரும் ஆள் பிணையில் விடுவிக்கப்பட்டனர். 
விஜயகாந்த் உள்ளிட்ட நான்கு பேரும் மீது 116 பவுண் நகைகளைத் திருடியமை உள்ளிட்ட நான்கு குற்றச்சாட்டுக்களை முன்வைத்து கோப்பாய் பொலிஸார் நீதிமன்றில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது. 
“சந்தேகநபர்கள் நால்வர் மீதான 2 குற்றச்சாட்டுக்கள் நிரூபிக்கப்பட்டன. 4 குற்றவாளிகளுக்குமான தண்டனைத் தீர்ப்பு இன்று பெப்ரவரி முதலாம் திகதி வழங்கப்படும்” என்று யாழ்ப்பாணம் நீதிமன்ற நீதிவான் சின்னத்துரை சதீஸ்தரன் தீர்ப்பளித்தார்.
இந்த நிலையில் வழக்கு இன்று கூப்பிடப்பட்டது. 4 பேரும் நீதிமன்றில் முன்னிலையாகினர். அவர்கள் சார்பில் மன்றில் தோன்றிய சட்டத்தரணி சர்மினி விக்னேஸ்வரன், தண்டனைத் தீர்ப்பை அடுத்த மாதம்வரை ஒத்திவைக்குமாறு மன்றில் விண்ணப்பம் செய்தார்.
வழக்கின் தண்டனைத் தீர்ப்பை வரும் மார்ச் 8ஆம் திகதிவரை நீதிமன்று ஒத்திவைத்தது.
விஜயகாந்தின் இந்த நடவடிக்கையால் அவரை தமது கட்சியின் அடிப்படை உறுப்பினர் பதவியிலிருந்து ஈ.பி.டி.பி. நீக்கியது. அதனால் அவர் முற்போக்கு தமிழ் தேசிய கட்சியை ஆரம்பித்தார். 
தற்போது அவரது கட்சி தமிழர் விடுதலைக் கூட்டணியுடன் இணைந்து அதன் உதயசூரியன் சின்னத்தில் யாழ்ப்பாணம் மாநகர சபைத் தேர்தலில் போட்டியிடுகிறது.

Get real time updates directly on you device, subscribe now.

You might also like