நாட்டு மக்களுக்கு கவலைதரும் செய்தி

எதிர்வரும் 17 ஆம் திகதிக்குள் நாட்டில் சுமார் 250 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்றுதியாகலாம் என கணிக்கப்பட்டுள்ளது இது எம்மைப் பொறுத்தவரையில் கவலையான செய்தி என தெரிவிக்கப்பட்டுள்ளது .

சுகாதார சேவை பணிப்பாளர் நாயகம் மருத்துவ நிபுணர் அனில் ஜாசிங்க இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

எனினும் பயண மட்டுப்படுத்தல் உள்ளிட்ட சுகாதார ஆலோசனைகளை உரிய முறையில் பின்பற்றினால் நாட்டில் கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்தலாம் என சுகாதார சேவை பணிப்பாளர் நாயகம் சுட்டிக்காட்டியுள்ளார்.

இதேவேளை , நோய் அறிகுறி தென்படாத சிறார்களுக்குள் கொரோனா வைரஸ் காணப்படக் கூடும் என சிறுவர்களுக்கான நோய் தொடர்பான விஷேட நிபுணர் தீபால் பெரேரா தெரிவித்துள்ளார் .

இதன்காரணமாக வைரஸ் தொற்றக் கூடும் என்ற அச்சம் உள்ள பின்னணியில் அது தொடர்பில் சிறார்கள் மற்றும் தாய்மார் அவதானத்துடன் செயற்பட வேண்டும் என அவர் அறிவுறுத்தியுள்ளார்.

வைரஸ் தொற்றிலிருந்து பாதுகாப்பாக இருக்க வேண்டுமாயின் அரசாங்கம் கூறிய சுகாதார நடைமுறைகளை பின்பற்ற வேண்டும் என அவர் வலியுறுத்தியுள்ளார். நாட்டில் கொரோனா தொற்றினால் 176 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

நேற்றைய தினத்தில் மாத்திரம் 10 பேர் அடையாளம் காணப்பட்டதாக சுகாதார அமைச்சின் தொற்று நோயியல் விஞ்ஞான பிரிவு வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன் 138 பேர் தொடர்ந்து மருத்துவ கண்காணிப்பில் உள்ளனர்.

அதேநேரம்,33 பேர் சிகிச்சைகளின் பின்னர் பூரண குணமடைந்து மருத்துவமனைகளில் இருந்து வெளியேறியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.