தேநீர் கொரோனவிற்கு மருந்தா? சிறிலங்கா அரசாங்கத்தின் புதிய கண்டுபிடிப்பு!!

தேநீரை தினமும் மூன்று வேளை அருந்தினால் கொரோனா வைரஸ் உட்பட வைரஸ் தொற்றுக்களிலிருந்து தப்பித்துக்கொள்ள முடியும் என்று ஸ்ரீலங்கா அரசாங்கத்தின் அமைச்சரவையின் இணை பேச்சாளரான மருத்துவர் ரமேஸ் பத்திரண அறிவித்துள்ளார்.

தற்போதைய நெருக்கடிமிக்க சூழலில் ஸ்ரீலங்காவின் தேயிலை ஏற்றுமதியை முதற்தடவையாக இணையத்தின் ஊடாக தேயிலை ஏலத்தை நடத்துவதற்கான ஏற்பாடுகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக ராஜபக்ச அரசாங்கத்தின் பெருந்தோட்டத்துறை அமைச்சர் ரமேஷ் பத்திரன தெரிவித்துள்ளார்.

உலக நாடுகளில் மட்டுமன்றி ஸ்ரீலங்காவிலும் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ள கோவிட்-19 கொரோனா வைரஸிற்கு தடுப்பு மருந்துகளைக் கண்டுபிடிக்கும் தீவிர முயற்சிகளில் மருத்துவ ஆராய்ச்சியாளர்களும், விஞ்ஞானிகளும் தொடர்ந்தும் ஈடுபட்டுள்ளனர்.

இந்த நிலையில் கொழும்பில் இன்றைய தினம் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்ட ராஜபக்ச அரசாங்கத்தின் பெருந்தோட்டத்துறை அமைச்சரும், அமைச்சரவையின் இணை பேச்சாளருமான ரமேஸ் பத்திரண,ஸ்ரீலங்காவின் தேயிலையைக் கொண்டு தயாரிக்கப்படும் தேநீரை தினமும் மூன்றுவேளை பருகினால் வைரஸ் தாக்குதலில் இருந்து பாதுகாத்துக்கொள்ள முடியும் என்று புதிய கண்டுபிடிப்பொன்றை தெரியப்படுத்தினார்.

இது தொடர்பாக கருத்து தெரிவித்த ரமேஸ் பத்திரன :”ஸ்ரீலங்காவின் வரலாற்றில் முதன் முறையாக சுமார் 137 வருடங்களுக்குப் பின்னர் ஸ்ரீலங்காவின் தேயிலைத் தோட்ட உரிமையாளர்கள் சங்கம் தேயிலை ஏலத்தினை இணையதளமூடாக மேற்கொள்ள தீர்மானித்திருக்கிறது.

இது மிகச் சிறந்த வெற்றியாகும். எனவே பெருந்தோட்டத் தொழிலாளர்கள் தமது உற்பத்தி தொடர்பில் வீண் அச்சம் கொள்ளத்தேவையில்லை. மேலும் உலக சந்தையில் இறப்பர் உற்பத்திக்கான கேள்வி அதிகரித்துள்ளது. இறப்பர் உற்பத்தியில் ஈடுபடும் பிரதான நாடுகளில் ஒன்றாக ஸ்ரீலங்கா காணப்படுகிறது.

எனவே நாட்டில் இறப்பர் உற்பத்திகளை ஊக்குவிப்பதன் மூலம் நாம் சிறந்த பலன்களைப் பெற்றுக் கொள்ள முடியும். அதேவேளை ஸ்ரீலங்காவின் தேயிலை கலந்த பிளக் டீ என்கிற தேநீரை தினமும் மூன்று அல்லது நான்கு வேளை பருகினால் வைரஸ் தாக்குதல்களிலிருந்து பாதுகாத்துக் கொள்ள முடியும்.

பால் கலக்காத தேநீரைப் பருகுவதால் உடலில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும் திறன் ஏற்படுகின்றது. அதனால் நிமோனியா,இன்புளுன்ஸா மாத்திரமன்றி கோவிட்-19 வைரஸிடம் இருந்தும் பாதுகாத்துக்கொள்ள முடியும்” என்று தெரிவித்தார்.