அரசியல் உரிமைக்காக போராடுவதோடு அபிவிருத்திகளையும் இணைத்து பயணிப்பவர்களை மக்கள் ஆதரிக்க வேண்டும்

எமது பகுதிகளில் அரசியல் உரிமைக்காக போராடுவதோடு அபிவிருத்திகளையும் இணைத்து பயணிப்பவர்களை மக்கள் ஆதரிக்க வேண்டும் என மானிப்பாய் பிரதேச சபைக்காக ஜே/137, ஜே/140 இணைந்த 10ம் வட்டாரத்தில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வீட்டுச் சின்னத்தில் போட்டியிடும் கலொக் கணநாதன் உஷாந்தன் தெரிவித்தார்.
 வட்டாரத்திற்குட்பட்ட கேலங்காமம் பகுதியில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பிலேயே இவ்வாறு தெரிவித்தார். 
 காலவோட்டத்தோடு இன்னொரு தேர்தல் எம்முன்னே வந்திருக்கின்றது. இத் தேர்தலில் எமது பகுதிகளில் அரசியல் உரிமைக்காக போராடுவதோடு அபிவிருத்திகளையும் இணைத்து பயணிப்பவர்களை மக்கள் ஆதரிக்க வேண்டும். இந்தப் பகுதியில் எம் கட்சி பல வேலைத்திட்டங்களை பல லட்சம் பெறுமதியில் செய்திருக்கின்றது. 
மாகாண சபை உறுப்பினர் கஜதீபனின் பன்முகப்படுத்தப்பட்ட 10 லட்சம் ரூபா நிதிப் பங்களிப்போடு வீதி விளக்குகள் பொருத்தப்படுகின்றன. அரசடி விநாயகர் வீதி புனரமைப்பு அங்கீகரிக்கப்பட்டு கேள்விக்கோரல் விடுக்கப்பட்டுள்ளது. கட்டுடை கோபாலன் முன்பள்ளிக்கு விளையாட்டு முற்றம் அமைக்கப்பட்டு தளபாடங்கள் வழங்கப்பட்டுள்ளது. 
பொதுநோக்கு மண்டபத்திற்கான சுற்றுமதில் மலசலகூடமும் அமைக்கப்பட்டுள்ளது. கட்டுடை சனசமூக நிலையத்தின் புனரமைப்பிற்கு பல உதவிகள் வழங்கப்பட்டுள்ளது. இங்கிருக்கும் மக்களில் பலருக்கு வாழ்வாதார உதவிகள் செய்யப்பட்டிருக்கின்றன. தவிர பிரதேச இளைஞர் கழக சம்மேளனத்தின் தலைவராக இருந்து கட்டுடை சைவ வித்தியாசாலைக்கு மூன்று லட்சத்து ஐயாயிரம் ரூபா நிதியில் விளையாட்டு முற்றமும் கட்டுடை திருவள்ளுவர் சனசமூக நிலையத்தின் கீழ் வாழும் மக்களின் குடிநீர் பிரச்சனைக்கு தீர்வு காணப்பட்டுள்ளது. 
 இன்னும் பல அபிவிருத்தி பணிகள் வர இருக்கின்றன. அபிவிருத்தியோடு அடிப்படை அரசியல் பிரச்சனைக்கு தீர்வு காணும் முயற்சிகளும் நடந்து கொண்டிருக்கின்றது. எதையுமே செய்யாது வருகின்ற பலர் மத்தியில் பல வேலைத்திட்டங்களை முடித்த பின் தான் இன்னும் பல செயற்திட்டங்களை முன் கொண்டு செல்வதற்கான ஒரு ஆணையினை தான் நாம் கேட்டு வந்திருக்கின்றோம். எமக்கென்று தேர்தல் விஞ்ஞாபனம் ஒன்று இருக்கின்றது. ஆனால் பலருக்கு எம்மை விமர்சிப்பது தான் விஞ்ஞாபனம். இதை விடுத்து மக்களுக்கு என்ன செய்தோம் என்ன செய்வோம் என்பதை சொல்ல வேண்டும். 
ஆனால் அவர்களால் முடியாது. ஏதும் செய்தால் தானே சொல்ல முடியும். எனவே மக்கள் தீர்க்கமாக ஆணையெடுத்து எமது பகுதிகளில் அரசியல் உரிமைக்காக போராடுவதோடு அபிவிருத்திகளையும் இணைத்து பயணிப்பவர்களை ஆதரிக்க வேண்டும் என்றார்.