ஸ்ரீலங்காவில் கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ள நிலையில் கொரோனா தொற்று தடுப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ள அரசாங்க அதிகாரிகள், ஊழியர்களுக்காக விசேட காப்புறுதித் திட்டமொன்று அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
உலகையே ஸ்தம்பிதமடைய செய்துள்ளது கொடிய கொரோனா வைரஸ். உலகளாவிய ரீதியில் 200 இற்கும் மேற்பட்ட நாடுகளை கொரோனா தொற்றிக்கொண்டுள்ளது.
விமான போக்குவரத்து கப்பல் போக்குவரத்து ரயில் பேருந்து என அனைத்தையும் நிறுத்தியுள்ளது கொரோனா.
ஒரு புறம் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உலகமே அடங்கிப்போயுள்ளது. மறு புறம் 85000 இற்கும் மேற்பட்டோர் உயிரிழந்து மயான காட்சியாக மாறியுள்ளது இப்பூவுலகு.
இந்நிலையில் கொரோனா தொற்றிற்குள்ளானவர்களை காப்பாற்ற வைத்தியர்கள் தாதியர்கள் சுகாதார உத்தியோகத்தர்கள் என அனைவரும் தமது சொந்த வாழ்க்கையை துறந்து உயிரை பணயம் வைத்து பணியாற்றிவருகின்றனர்.
இந்நிலையில் கொரோனா தொற்று தடுப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ள அரசாங்க அதிகாரிகள், ஊழியர்களுக்காக விசேட காப்புறுதித் திட்டமொன்று அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
இலங்கை காப்புறுதி கூட்டுத்தாபனத்தினால் இதுகுறித்த அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது.
இதற்கமைய விரு அபிமன் எனும் பெயரில் 15 இலட்சம் ரூபாய் விசேட காப்புறுதி உறுதி செய்யப்பட்டுள்ளது.
அதாவது, கொரோனா தடுப்பு நடவடிக்கையில் ஈடுபடும் அரச ஊழியர்கள் கடமையின் போது உயிரிழக்கும்போது, உயிரிழப்பவர்களின் குடும்பத்துக்கு, 15 இலட்சம் ரூபாய் காப்புறுதி வழங்கப்படவுள்ளது.
இதேவேளை இலங்கை காப்புறுதிக் கூட்டுத்தாபனம், கொவிட்-19 சுகாதார சமூக நிதியத்துக்கு 50 இலட்சம் ரூபாய் பணத்தை அன்பளிப்பு செய்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.






