மாவைக் கந்தன் ஆலயத்தில் தேர்தல் பரப்புரை- தள்ளுபடி செய்தது நீதிமன்று (வீடியோ)

யாழ்ப்பாணம் மாவிட்டபுரம் கந்தசுவாமி ஆலயத்தில் தமிழ் தேசியப் பேரவையின் வேட்பாளர்கள் சிலர் தேர்தல் அறிக்கையை பூசை வழிபாடுகளில் ஈடுபட்டமை தொடர்பில் பொலிஸார் போதிய ஆதரங்களை முன்வைக்கத் தவறியதால் வழக்கைத் தள்ளுபடி செய்து மல்லாகம் நீதிவான் நீதிமன்றம் உத்தரவிட்டது.

“முறைப்பாட்டாளர்களின் குற்றச்சாட்டுக்கு அமைவாக ஆதரங்களைத் தேடினோம், அவற்றை நிரூபிக்க முடியவில்லை” என்று தெல்லிப்பளைப் பொலிஸார் மன்றில் தெரிவித்தனர்.
தேர்தல் பரப்புரைக் கூட்டங்களை மத வழிபாட்டுத் தலங்களில் நடத்துவது முற்றாகத் தடை செய்யப்பட்டுள்ளது என உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான வேட்பு மனுக்களை கோர முன்னரே தேர்தல்கள் ஆணைக்குழு அறிவித்திருந்தது.
இந்த நிலையில் அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் கட்சியுடன் இணைந்து தமிழ் தேசியப் பேரவை என்ற தேர்தல் கூட்டில் போட்டியிடும் வேட்பாளர்கள் சிலர் மாவிட்டபுரம் கந்தசுவாமி ஆலய வளாகத்தில் தமது தேர்தல் அறிக்கையை வெளியிட்டனர். அதுதொடர்பான செய்திகள் ஒளிப்படங்கள் சமூக ஊடகங்களில் வெளியாகியிருந்தன.
இந்தத் தேர்தல் விதி மீறல் தொடர்பில் வலி.வடக்கு பிரதேச சபையின் முன்னாள் தவிசாளரும் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் வேட்பாளருமான சுகிர்தன் தெல்லிப்பளை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டது. 
முறைப்பாட்டையடுத்து மாவிட்டபுரம் கந்தசுவாமி ஆலய குருக்கள் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டார். குருக்கள் மல்லாகம் நீதிவான் நீதிமன்றுக்கு கடந்த 11ஆம் திகதி அழைக்கப்பட்டார். அவருக்கு தேர்தல் விதிமுறை தொடர்பில் உரிய அறிவுறுத்தல் நீதிமன்றால் வழங்கப்பட்டது.
இந்தத் தேர்தல் விதிமீறல் தொடர்பில் பொலிஸார் உரிய விசாரணைகளை முன்னெடுக்கவில்லை என தேர்தல்கள் ஆணைக்குழுவின் உறுப்பினர் பேராசிரியர் ரட்ணஜீவன் கூல் தெல்லிப்பளைப் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்தார்.
இந்த நிலையில் தமிழ் தேசியப் பேரவை சார்பில் யாழ்ப்பாணம் தேர்தல் திணைக்களத்தில் வேட்புமனுக்களைக் கையளித்ததன் அடிப்படையில் சட்டத்தரணி வி.மணிவண்ணன் மற்றும் மாவிட்டபுரம் கந்தசுவாமி ஆலய குருக்கள் ஆகியோரை மல்லாகம் நீதிமன்றில் இன்று முன்னிலையாகுமாறு அழைப்புக் கட்டளை வழங்கப்பட்டது.
மல்லாகம் நீதிமன்றில் அவர்கள் இருவரும் முன்னிலையாகினர். அவர்கள் சார்பில் தமிழ் தேசிய மக்கள் முன்னணி சார்பு சட்டத்தரணிகள் குழாம் மன்றில் தோன்றினார்கள்.
“முறைப்பாடுகள் தொடர்பில் முன்னெடுக்கப்பட்ட விசாரணைகளில் முறைப்பாட்டாளர்களின் குற்றச்சாட்டின் அடிப்படையில் ஆதரங்களைப் பெறமுடியவில்லை” என்று பொலிஸார் மன்றுக்கு விண்ணப்பம் செய்தனர்.
இந்தக் குற்றச்சாட்டுத் தொடர்பில் முறைப்பாட்டாளரால் மன்றுக்கு வேறு ஆதாரங்களை முன்வைக்க முடியுமா? என்று மன்று கேள்வி எழுப்பியது. வேறு ஆதாரங்கள் இல்லை என்று முறைப்பாட்டாளர் மன்றிடம் தெரிவித்தார்.
இந்த நிலையில் போதிய ஆதாரங்கள் இல்லாததால் வழக்கை தள்ளுபடி செய்து நீதிமன்று உத்தரவிட்டது.
இதேவேளை, முறைப்பாட்டாளர்களில் ஒருவரான தேர்தல்கள் ஆணைக்குழுவின் உறுப்பினர் பேராசிரியர் ரட்ணஜீவன் கூல் நீதிமன்றில் இன்று முன்னிலையாகவில்லை எனத் தெரிவிக்கப்பட்டது.

Get real time updates directly on you device, subscribe now.

You might also like