கொரோனாவின் கோரதாண்டவம்- யாருமற்ற தீவில் புதைக்கப்படும் உடல்கள்

கொரோன வைரஸ் காரணமாக உயிரிழப்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதை தொடர்ந்து உயிரிழந்தவர்களின் உடல்களை மனித நடமாட்டமற்ற ஹார்ட் ஐலன்ட் என்ற பகுதியில் புதைக்கும் நடவடிக்கைகளை நியுயோர்க் அதிகாரிகள் மேற்கொண்டுள்ளனர்.

இந்த உடல்களை புதைக்கும் நடவடிக்கைகளை தொழிலாளர்களை பயன்படுத்தி அதிகாரிகள் முன்னெடுத்துள்ளனர்.

19 ம் நூற்றாண்டு முதல் உறவினர்கள் எவருமற்ற அனாதைகளின் உடல்களை இந்த தீவிலேயே அதிகாரிகள் புதைத்து வந்துள்ளனர்.

வழமையாக வாரத்திற்கு 25 உடல்கள் இந்த தீவில் புதைக்கப்படும் என தெரிவித்துள்ள ரொய்ட்டர் சிறைக்கைதிகளிற்கு கூலியை வழங்கி இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்படுவது வழமை எனவும் குறிப்பிட்டுள்ளது.

அத்துடன் இந்த தீவிற்கு படகு மூலமே செல்ல முடியும் எனவும் ரொய்ட்டர் குறிப்பிட்டுள்ளது.

எனினும் கொரோனா வைரஸ் நியுயோர்க்கை தாக்க தொடங்கிய பின்னர் இங்கு எடுத்து வரப்படும் உடல்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக தெரிவித்துள்ள ரொய்ட்டர், நாளாந்தம் 25 உடல்கள் எடுத்து வரப்படுவதாக உடல்கள் புதைக்கப்படுவதை கண்காணிக்கும் சீர்திருத்த திணைக்களத்தின் அதிகாரியொருவர் குறிப்பிட்டதாக செய்தி வெளியிட்டுள்ளது.

அத்துடன் ஐந்து நாட்களும் உடல்கள் புதைக்கப்படுகின்றதாகவும், உடல்களை மூடுவதற்கான பைகளில் அவற்றை சுற்றிய பின்னர் பிரேதப்பெட்டியில் வைத்து அவற்றை புதைக்கின்றனர் எனவும் ரொய்ட்டர் தெரிவித்துள்ளது.

இறந்தவர்களின் உடல்கள் பெட்டியில் எழுதப்படுவதுடன் ,வெட்டப்பட்ட புதைகுழிகளில் பிரேதப்பெட்டிகள் வைக்கப்படுகின்றன என ரொய்ட்டர் தெரிவித்துள்ளது.

இதேவேளை சமூக தனிமைப்படுத்தலிற்காகவும் பாதுகாப்பு காரணங்களிற்காகவும் சிறைக்கைதிகளை நாங்கள் பயன்படுத்தவில்லை என அதிகாரிகள் தெரிவித்துள்ளதாக கூறியுள்ள ரொய்ட்டர், சுமார் 25 உடல்களுடன் குளிரூட்டப்பட்ட வாகனத்தை சுமந்தபடி பெரிய படகொன்று வருவதை பார்த்ததாகவும் தெரிவித்துள்ளது.

ஹார்ட் தீவின் திகில் வரலாறு

ஹார்ட் தீவின் வரலாறு அச்சமூட்டுவது. 1868 இல் உள்நாட்டுப் போரின்போது இறந்தவர்களின் உடல்களை புதைக்குமிடமாக இந்த தீவு பயன்படுத்தப்பட்டது. இதுவரை, அங்கு ஒரு மில்லியனுக்கும் அதிகமான உடல்கள் புதைக்கப்பட்டுள்ளன.

மனநல நிறுவனம், காசநோய் சுகாதார நிலையம், உடல்கள் புதைக்கும் இடம் மற்றும் பனிப்போர் காலத்தில் விமான எதிர்ப்பு ஏவுகணை தளமாக இது பயன்படுத்தப்பட்டது.

1868 ஆம் ஆண்டில் கல்லறையாக பயன்படுத்தப்பட்ட பின்னர், நகர மருத்துவமனைகளில் இருந்து அகற்றப்படும் உரிமைகோரப்படாத சடலங்கள் இங்கு புதைக்கப்பட்டு வருகின்றன.

1958 அளவில் இங்கு அடக்கம் செய்யப்பட்ட சடலங்களின் எண்ணிக்கை 500,000 ஐ எட்டியது. 1870 மஞ்சள் காய்ச்சல் தொற்றுநோய், 1919 ஸ்பானிஷ் காய்ச்சல் காரணமாக இறந்தவர்களின் உடல்களும் இங்குதான் புதைக்கப்பட்டது.

ஸ்பானிஷ் காய்ச்சலின் போது, ​​500,000 க்கும் மேற்பட்ட அமெரிக்கர்கள் இறந்தபோது, ​​நகர புதைகுழிகளில் புதைக்க இடமின்மையால் ஆயிரக்கணக்கானோர் ஹார்ட் தீவில் அடக்கம் செய்யப்பட்டனர்.

தொற்றுநோய்களின் போது ஒரு நாளைக்கு 50 முதல் 5,000 உடல்கள் இங்கு புதைக்கப்பட்டன.

மிக சமீபத்திய காலங்களில், உரிமை கோரப்படாத ஆயிரக்கணக்கான எய்ட்ஸ் நோயாளிகளின் உடல்கள் இங்கு புதைக்கப்பட்டுள்ளர். 1985 ஆம் ஆண்டிலிருந்து எயிட்ஸ் நோயாளிகளின் உடல்கள் புதைக்கப்பட்டு வருகிறது.

1988 மற்றும் 1999 க்கு இடைப்பட்ட காலத்தில் 200 அடி அகழியில் 8,904 குழந்தைகளின் உடல்கள் புதைக்கப்பட்டன.

இது 1980 களில் ஒரு பொது கல்லறையாகப் பயன்படுத்தப்பட தொடங்கிய பின்னர், உரிமை கோரப்படாத சடலங்களை நியூயோர்க்கில் இருந்து வாரத்திற்கு இரண்டு முறை எடுத்துச் சென்று ரைக்கர்ஸ் தீவில் உள்ள கைதிகளால் அடக்கம் செய்யப்படுகிறது.

உரிமை கோரப்படாத உடல்கள், மருத்துவ பள்ளிகளிலோ அல்லது சவக்கிடங்கு வகுப்புகளிலோ பயிற்சிக்கு பயன்படுத்த மாநில சட்டத்தில் இடமுண்டு.

உரிமை கோரப்படாத உடல்களுக்கும் மருத்துவப் பள்ளிகளால் பயன்படுத்தப்பட்ட இடங்களுக்கும் இங்கு புதைக்கப்பட்டன.