இணையத்துக்குள் ஊடுருவிய ஹேக்கர்கள்; 66 கோடி டொலர் மதிப்புள்ள பிட்காயின்கள் திருட்டு

இணையம் மற்றும் வணிக செய்திகளில் பிட்காயின் (Bitcoin) எனும் கள்ளப்பணம் ஸ்பாட் லைட் பெற்றிருக்கிறது.
பொதுவாக பிட்காயின் என்பது இணையத்தில் (கள்ளப்பரிமாற்றம் செய்ய மட்டும்) பயன்படுத்தக்கூடிய பணம் எனலாம். ஆனால் இதனை கொண்டு அமேசான் மற்றும் பிளிப்கார்ட் போன்ற தளங்களில் பொருட்களை வாங்கவோ, இதர சேவைகளை பெறவோ அல்லது பயன்படுத்தவோ முடியாது.
பிட்காயின் என்பது கள்ளச் சந்தையில் பயன்படுத்த கண்டுபிடிக்கப்பட்ட பணம் ஆகும். இதனை கண்டறிந்தவர் மற்றும் அவரது பின்புலம் இதுவரை யாரும் அறியாத ஒன்றாக இருக்கிறது. சமீபத்தில் ஒரு பிட்காயின் மதிப்பு 16,000 டாலர்கள் அதாவது இந்திய மதிப்பில் ரூ.10,31,728 வரை உயர்ந்ததே, பிட்காயின் திடீர் டிரென்ட் ஆக காரணமாக அமைந்துள்ளது.
இணையத்தில் மொத்தம் 2.1 கோடி பிட்காயின்கள் மட்டும் புழக்கத்திற்கு விநியோகம் செய்யப்பட இருக்கின்றது. எனினும் இத்தகைய பிடிகாயின்களை விநியோகம் செய்ய 2140-ம் ஆண்டு வரை ஆகும் என கணிக்கப்பட்டுள்ளது. இதுவரை மட்டும் இணையத்தில் மொத்தம் 1.67 கோடி பிட்காயின்கள் புழக்கத்திற்காக விநியோகம் செய்யப்பட்டுள்ளன.
கள்ளச்சந்தையில் இணைய பரிமாற்றங்களின் போது இதுவரை 9,80,000 பிட்காயின்கள் ஹேக்கர்கள் மற்றும் பல்வேறு திருடர்களால் திருடப்பட்டுள்ளன. இவற்றின் மதிப்பு 1500 கோடி அமெரிக்க டாலர்கள் ஆகும். இதன் இந்திய மதிப்பு சுமார் ஒரு லட்சம் கோடிகளை (967245000000) தொடுகிறது.
ஒரே ஆண்டில் 1700 சதவீதம் உயர்ந்த பிட்காயின் விலை கடந்த டிசம்பர் மாதம் 15-ம் தேதி நிலவரப்படி 17 ஆயிரத்து 752 டாலர்களாக அதிகரித்தது. அந்த மாதத்தில் மட்டும் பிட்காயினின் மதிப்பு 77 சதவீதம் அதிகரித்தது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில், ஜப்பான் நாட்டின் பிரபல ’காயின்செக்’ நாணய மாற்று இணையத்துக்குள் ஊடுருவி 66 கோடி டாலர்கள் மதிப்புள்ள பிட்காயின்களை ஹேக்கர்கள் சுருட்டியுள்ளனர். இதனால், அந்நிறுவனத்தின் இன்றைய வர்த்தகப் பரிவர்த்தனை முடங்கியுள்ளது. இச்சம்பவத்துக்காக வாடிக்கையாளர்களிடம் மன்னிப்பு கேட்டுள்ள அந்த நாணய மாற்று நிறுவனத்தின் தலைமை அதிகாரி யுசுக்கே இந்த இணையத் திருட்டால் பாதிக்கப்பட்டவர்களுக்கு இழப்பீடாக 52.3 கோடி டாலர்கள் திருப்பி அளிக்கப்படும் என அறிவித்துள்ளார்.
முன்னதாக, இதைப்போன்ற நாணய மாற்று நிறுவனங்கள்மீது சைபர் தாக்குதல் நடத்தப்படலாம் என ஜப்பான் நாட்டு நிதி நிறுவனங்களுக்கான முகமை எச்சரித்து இருந்தது. குறிப்பாக, ’காயின்செக்’ உள்ளிட்ட சுமார் 30 நிறுவனங்களின் இணைய பாதுகாப்பு பலப்படுத்த வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டிருந்தது, குறிப்பிடத்தக்கது.