ஆசியாவின் சிறந்த வணக்கஸ்தலமாக மாறப் போகும் திருக்கோணேஸ்வரம்!!

திருகோணமலை – திருக்கோணேஸ்வரர் ஆலயத்தை தரமுயர்த்தி ஆசியாவின் தலை சிறந்த சைவ வணக்கஸ்தலமாக மாற்றுவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.இது தொடர்பில் ஆராய்வதற்காக, புதுடில்லியில் இருந்து முதலீட்டாளர்கள் குழுவொன்று விசேட விமானம் மூலம் திருகோணமலைக்கு நேற்று விஜயம் செய்துள்ளனர்.
கிழக்கு மாகாண ஆளுநர் ரோஹித போகொல்லாகமவின் வழிகாட்டலில் ஆசியாவின் தலை சிறந்த இந்து வணக்கஸ்தலமாக திருகோணமலை கோணேஸ்வரர் ஆலயத்தை மாற்றி யாத்திரிகர்களுக்கான உட்கட்டுமான வசதிகளை அதிகரித்து, இந்தியா மற்றும் பல நாடுகளில் இருந்தும் யாத்திரிகர்கள் எமது நாட்டிற்கு வருவதை மேம்படுத்துவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
இந்த திட்டத்தின் ஓர் அங்கமாக இந்தியா புதுடில்லியைச் சேர்ந்த திரு.உதய தேஷாய் மற்றும் பிரவீன் அக்றவால் உட்பட 14 பேர் கொண்ட குழுவினர் விசேட விமானம் மூலம் திருகோணமலை சீனக்குடா விமான நிலையத்தை வந்தடைந்தனர்.இக்குழுவினர் திருக்கோணேஸ்வரர் ஆலயத்தில் விசேட வழிபாடுகளில் கலந்துக் கொண்டதோடு, இவ்வாலயத்தினை உலகளாவிய ரீதியில் வசிக்கும் இந்துக்களின் வணக்கஸ்தலமாக மேம்படுத்துவது குறித்தும் ஆராய்ந்தனர்.
அத்துடன், இக்குழுவினர் திருகோணமலையில் சுற்றுலாத்துறையுடன் தொடர்புடைய பிரதேசங்களை பார்வையிட்டதுடன் இம்மாவட்டத்தின் முதலீடுகளை மேற்கொள்வது குறித்தும் ஆராய்ந்தனர்.
இதில், கிழக்கு மாகாண ஆளுநர் அலுவலக அதிகாரிகள் கிழக்கு மாகாண சுற்றுலாப்பணியக அதிகாரிகளும் கலந்து கொண்டனர்.

Get real time updates directly on you device, subscribe now.

You might also like