பூநகரி – கிராஞ்சி கடற்பகுதியில், சிறிலங்கா கடற்படையினரின் வெறித்தனமான தாக்குதலில் மீனவர்கள் இருவர் படுகாயமடைந்துள்ளதை வன்மையாக கண்டிப்பதாக இலங்கைத் தமிழ் அரசுக் கட்சி வாலிபர் முன்னணியின் பொருளாளரும் சமூக ஆர்வலருமாகிய அன்ரனி ஜெயநாதன் பீட்டர் இளஞ்செழியன் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
அவர் வெளியிட்ட அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது
கடந்த 07.04.2020 அன்று செவ்வாய்க் கிழமை, மாலை 4 மணிக்கு கிராஞ்சி,சிவபுரம்,பூநகரியை சேர்ந்த பக்கியநாதன் இன்பராஜ் வயது 28 அவரது சகோதரன் பாக்கியநாதன் ஜூலியன் வயது 25 ஆகியோர் கிராஞ்சியில் உள்ள கடற்படை காவலரணில் உரிய ஆவணங்களை சமர்ப்பித்து விட்டு, கடற்தொழிலுக்காக சென்றிருந்த வேளையில் இரவு 07 மணியளவில் கடற் கரையில் இருந்து 200 மீட்டரில் மீன் பிடித்து கொண்டு இருக்கையில் கடலில் கடற்படையினர், இம்மீனவர்களை கைதுசெய்து, நீருக்குள் மூழ்கடித்து, ஆயுதங்களால் தாக்கியதுடன் வாய்களால் கடித்துக் குதறியுள்ளனர்.
இவ் வெறியாட்டத்தில் ஈடுபட்ட கடற்படையினரில் சிலர் சீருடை அணியாமல் நிர்வாணமாக நின்றதாகவும், அதிகளவு மதுபோதையில் இருந்ததாகவும் பாதிக்கப்பட்டவர்கள் தரப்பிலிருந்து தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடற்தொழிலில் ஈடுபட்டிருந்த மீனவர்களை ஆயுதங்களாலும் அடித்து வாய்களால் கடித்து குதறி உள்ளனர். பின்னர் கடற்படை முகாமுக்கு அழைத்து சென்று பயமுறுத்தி “வெளியில் தெரிந்தால் என்ன செய்வோம் தெரியும் தானே”
“வைத்தியசாலைக்கு போகக்கூடாது போனால் பிறகு தெரியும் தானே” என்றும் மேலும், “இச்சம்பவம் தொடர்பாக முறைப்பாடுகள் எதனையும் செய்யக்கூடாது” எனவும், “மருத்துவ சிகிச்சைக்காக வைத்தியசாலைக்கு செல்லக்கூடாது” எனவும் இவர்கள் அச்சுறுத்தப்பட்டுள்ளனர்.
இதனால் அச்சமுற்று வீடுகளில் இருந்த இவர்கள், தற்போது தாக்குதலின் காரணமாக ஏற்பட்ட வேதனை தாங்க முடியாமல் தகவலை வெளியிட்டுள்ளனர்.
மருத்துவ சேவையை பெற்றுக் கொள்ள மருத்துவமனைக்கு கூட செல்ல மீனவர்கள் பயந்து வீட்டுக்குள்ளே முடங்கி இருக்கிறார்கள்.
இப்படியான செயற்பாடுகள் இராணுவ ஆட்சியை நிலை நாட்ட அத்திவாரமா என பீட்டர் இளஞ்செழியன் கேள்வி எழுப்பியுள்ளார்.
இவ் விடயத்தை உடன் மனித உரிமை ஆணைக்குழுவும், நீதித்துறையும் உடன் இதில் தலையிட்டு சம்பந்தப்பட்ட மீனவர்களுக்கு ஏற்பட்டுள்ள உயிர் அச்சுறுத்தலை பாதுகாக்க வேண்டும் அத்துடன் சம்பந்தப்பட்ட கடற்படையினரை உடன் கைது செய்து சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும்.
அதேபோல் ஊரடங்கு பிறப்பித்துள்ள வேளையில் அவர்களை உடன் வைத்தியசாலையில் மருத்துவ சேவையினை பெற்றுக் கொள்ள உரிய தரப்புகள் உடன் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் தனது செய்தி அறிக்கையில் தெரிவித்துள்ளார்.






