பல்கலைகளை மீள ஆரம்பிக்கும் திகதி ஆலோசனைகள் பெறப்பட்ட பின்னரே தீர்மானிக்கப்படும் – உயர்கல்வி அமைச்சு

பல்கலைக்கழகங்களை மீள ஆரம்பிப்பது தொடர்பில் நாட்டில் நிலமைகளை ஆராய்ந்து உரிய ஆலோசனைகள் பெறப்பட்டதன் பின்னரே திகதி அறிவிக்கப்படும் என்று உயர்கல்வி அமைச்சு சுட்டிக்காட்டியுள்ளது.

இந்தத் தகவலை ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

நாட்டில் கோரோனா வைரஸ் தொற்றுப் பரம்பலைக் கட்டுப்படுத்தும் வகையில் கடந்த மார்ச் 13ஆம் திகதியுடன் கற்றல் நடவடிக்கைகள் உள்பட அனைத்துப் பணிகளையும் இடைநிறுத்தி அனைத்துப் பல்கலைக்கழகங்களும் மூடப்பட்டன.

இந்த நிலையில் பாடசாலைகள் வரும் மே 11ஆம் திகதி இரண்டாம் தவணைக்காகத் திறக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. எனினும் பல்கலைக்கழகங்களை ஆரம்பிக்கும் உரிய ஆலோசனைகளைப் பெற்ற பின்னரே தீர்மானிக்கப்படும் என்று உயர்கல்வி அமைச்சுத் தெரிவித்துள்ளது.

இதேவேளை, 2020-2021 கல்வி ஆண்டுக்காக பல்கலைக்கழகங்களுக்கு மாணவர்களை இணைப்பதற்கான இணைய வழி விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படும் இறுதி நாளாக மே 25ஆம் திகதி நிர்ணயிக்கப்பட்டுள்ளது.