சென்னை பாரதியார் சங்கமும் யாழ். பாரதி மன்றமும் இணைந்து யாழ்ப்பாணத்தில் நடத்திய பாரதி விழா

தமிழகத்தின் புகழ் பூத்த பாரதியார் சங்கமும் யாழ்ப்பாணம் பாரதி மன்றமும் இணைந்து நடத்திய பாரதி விழா இன்று (28.01.2018 )ஞாயிற்றுக்கிழமை காலை யாழ்ப்பாணம் வீரசிங்கம் மண்டபத்தில் நடைபெற்றது..

சென்னை பாரதியார் சங்கத் தலைவர் மூத்த வழக்கறிஞர் இரா.காந்தி தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் மேல் மாகாண ஆளுநர் கே.சி. லோகேஸ்வரன் தலைமை விருந்தினராகவும் யாழ். இந்தியத் துணைத்தூதர் ஆ.நடராஜன் சிறப்பு விருந்தினராகவும் கலந்து கொண்டனர்.

நிகழ்வில் சென்னை சரஸ்வதி பரதநாட்டிய வித்தியாலய இயக்குநர் நர்த்தன சிரோண்மணி கிரிஜா முருகன் குழுவினரின் பரத நாட்டிய நிகழ்ச்சியும் கலைமாமணி சோபனா ரமேஷ் வழங்கிய பாரதி பாடல்களுக்கான பரத நாட்டிய நிகழ்ச்சியும் இடம்பெற்றன.

நிகழ்வின்போது மன்னார் தமிழ்சச்ங்கத்தைச் சேர்ந்த அருட்பணி தமிழ்நேசன் அடிகளார் முன்னிலை உரை ஆற்றினார். தமிழகம் ,மலேசியா ,இலங்கை ஆகிய நாடுகளைச் சேர்ந்த தமிழார்வலார்கள் வாழ்த்துரைகளை வழங்கினர்.

சிறப்பு; கௌரவிப்பாக இலங்கையில் பாரதி புகழ் பரப்பும் நால்வர் மதிப்பளிக்கப்பட்டனர். யாழ். பல்கலைக்கழக வாழ்நாள் பேராசிரியர் அ.சண்முகதாஸ் பாரதியார் விருது வழங்கிக் கௌரவிக்கப்பட்டார். அத்துடன் யாழ். பல்கலைக்கழக முன்னாள் தமிழ்த்துறைத் தலைவர் பேராசிரியர் எஸ்.சிவலிங்கராஜா, பலாலி ஆசிரிய கலாசாலை முன்னாள் அதிபர் கவிஞர் சோ.பத்மநாதன் ,கோப்பாய் ஆசிரிய கலாசாலை பிரதிமுதல்வர் செந்தமிழ்ச்சொல்லருவி ச.லலீசன் ஆகியோர் பாரதி பணிச் செல்வர் என்ற விருது வழங்கி மதிப்பளிக்கப்பட்டனர். மேலும் திருச்சியைச் சேர்ந்த பேராசிரியர் வெ.இராசேந்திரன், பிரான்சைச் சேர்ந்த சாம் விஜய் ஆகிய தமிழார்வலர்களும் பாரதி பணிச்செல்வர் என்ற விருது வழங்கிக் கௌரவிக்கப்பட்டனர்.

நிகழ்வின் இலங்கை ஏற்பாட்டாளர்கள் சார்பில் உரையாற்றிய மறவன்புலவு சச்சிதானந்தம் எம்மண்ணில் இடர் நேருற்ற போதெல்லாம் எம்மை எழுச்சி கொள்ள வைத்தது அச்சமில்லை அச்சமில்லை என்ற பாரதியார் பாடலே என்றார். மேலும் ஈழத்தமிழ்ப்போராளிகளுக்காகவும் அரசியலாளர்களுக்காகவும் தமிழ்நாட்டில் இடர் நேர்ந்த சந்தர்ப்பங்களில் எல்லாம் நீதித்துறையின் ஊடாகக் குரல் எழுப்பியவர் மூத்த வழக்கறிஞர் இரா. காந்தியே ஆவார். அவரிடமும் அச்சமில்லை என்ற போர்க்குணம் இருந்தமையாலேயே சவால்களைச் சந்தித்து கடினமான காலப்பகுதிகளிலும் ஈழத்தமிழர்களுக்கு ஆதரவாகச் செயற்பட்டார் எனப் புகழாரம் சூட்டினார்.

யாழ்ப்பாணப் பல்கலைக்கழக நூலகம் மற்றும் நல்லூர் பிரதேச சபையின் கொக்குவில் நூலகம் என்பவற்றிற்கு பாரதியார் படைப்புக்களின் முழுத்தொகுதி நூல்கள் அன்பளிப்பாக வழங்கப்பட்டன.

படங்கள்: ஐ.சிவசாந்தன்

Get real time updates directly on you device, subscribe now.

You might also like