கன்றுத் தாச்சி பசு மாட்டை இறைச்சியாக்கி அவற்றின் கழிவுகளை ஏற்றிச்சென்ற கும்பல் சிக்கிக்கொண்டது.

கன்றுத் தாச்சி பசு மாட்டை இறைச்சியாக்கி அவற்றின் கழிவுகளை ஏற்றிச்சென்ற கும்பல் வசமாக சிக்கிக்கொண்டது.
இந்தச் சம்பவம் இன்று முற்பகல் யாழ்ப்பாணம் சிவலிங்கப்புளியடியில் இடம்பெற்றது.
கன்றுத்தாச்சி பசு மாட்டைக் கடத்திச்சென்று அதனை இறைச்சியாக்கிய கும்பல், அவற்றின் கழிவுகளை கன்டர் வாகனத்தில் கடத்திச் சென்றது.
யாழ். – ஓட்டுமடம் – சிவலிங்கப்புளியடி ஊடாகச் சென்ற வாகனத்தை அவதானித்த பசுவின் உரிமையாளரான பெண்ணொருவர், சந்தேகத்தின் அடிப்படையில் அதனைத் பின்தொடர்ந்து சென்றுள்ளார்.
வாகனத்தை கே.கே.எஸ். வீதி சிவலிங்கப்புளியடியில் வழிமறித்த அந்தப் பெண், வாகனத்தின் பின் பகுதியைத் திறந்து காண்பிக்குமாறு கேட்டுள்ளார்.
எனினும் வாகனத்தில் சென்றோர் அந்தப் பெண்ணிடம் முரண்பட்டனர். 
இதனை அவதானித்த அந்தப் பகுதியில் நின்றோர், ஒன்று கூடி வாகனத்தின் பின்பகுதியை திறக்குமாறு கேட்டனர்.
மக்கள் ஒன்றுகூடியதால் வாகனத்தை திறந்தனர். அதற்குள் பசு மாட்டின் உடற்பாகங்கள் காணப்பட்டன.
பசுவின் செவியில் குத்தப்பட்டிருந்த இலக்கத்தை அடிப்படையாக வைத்து பசுவின் உரிமையாளரான பெண் அடையாளம் காட்டினார்.
யாழ்ப்பாணம் பொலிஸாருக்கு தகவல் வழங்கப்பட்டது. சம்பவ இடத்துக்கு வந்த பொலிஸார், வாகனத்தை மீட்டதுடன், அதில் பயணித்தோரையும் கைது செய்தனர்.