சர்வதேச கிரிக்கெட் மைதானத்துடன் விளையாட்டு நகரம் (வீடியோ)

யாழ்ப்பாணம் மண்டைதீவில் சர்வதேச கிரிக்கெட் மைதானத்துடன் விளையாட்டு நகரம் அமைக்கும் திட்டத்தை நடைமுறைப்படுத்துவது தொடர்பில் இலங்கை கிரிக்கெட் சங்கத் தலைவரும் பிரதி சபாநகருமான திலங்க சுமதிபால இன்று நேரில் ஆராய்தார்.

இந்தத் திட்டம் மூன்று ஆண்டுகளுக்குள் முடிவுறுத்தப்படும் என்று பிரதி சபாநாயகர் திலங்க சுமதிபால தெரிவித்தார்.
யாழ்ப்பாணத்தில் சர்வதேச கிரிக்கெட் மைதானத்தை அமைப்பது தொடர்பில் பல வருடங்களாக ஆராயப்பட்டு வருகிறது. ஆனைக்கோட்டை சோமசுந்தரம் வீதி, பொன்னாலைச் சந்திக்கு அண்மையாக உள்ள திடல் உள்ளிட்ட இடங்கள் இதற்காக முன்மொழியப்பட்டன.
எனினும் அவை ஆராயப்பட்டு சில காரணிகளால் கைவிடப்பட்டன.
இந்த நிலையில் மண்டைதீவில் பெரும் திடல் முன்மொழியப்பட்டது.
அந்த இடத்தை நேரில் பார்வையிடுவதற்காக இலங்கை கிரிக்கெட்டின் தலைவரும் நாடாளுமன்ற பிரதி சபாநாயகருமான திலங்க சுமதிபால தலைமையிலான குழுவினர் இன்று யாழ்ப்பாணத்துக்கு வருகை தந்தனர்.
அவர்கள் இன்று முற்பகல் மண்டைதீவுக்குச் சென்று கிரிக்கெட் மைதானம் அமைக்கும் இடத்தைப் பார்வையிட்டனர்.
இந்தக் குழுவினருடன் வடக்கு மாகாண ஆளுநர் றெஜினோல்ட் குரே, நாடாளுமன்ற உறுப்பினர் அங்கஜன் இராமநாதன், வடக்கு மாகாண ஆளுநரின் செயலாளர் சட்டத்தரணி எல்.இளங்கோவன் ஆகியோரும் மண்டைதீவுக்கு வருகை தந்தனர்.

யாழ்ப்பாணத்துக்கு வரம்

“சர்வதேச கிரிக்கெட் மைதானத்துடன் கூடிய விளையாட்டு நகரம் யாழ்ப்பாணத்துக்குக் கிடைப்பது வரம். மூன்று ஆண்டுகளில் இந்த மைதானம் அமைக்கப்படும். நல்லிணக்கத்தை அடிப்படையாகக் கொண்டு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் பணிப்பில் இந்த மைதானம் விரைந்து அமைக்கப்படவுள்ளது” என்று நாடாளுமன்ற உறுப்பினர் அங்கஜன் இராமநாதன் தெரிவித்தார்.

வடக்கின் விளையாட்டு நகரம்

“மண்டைதீவில் வடக்கின் விளையாட்டு நகரம் அமைக்கப்படவுள்ளது. சர்வதேச கிரிக்கெட் மைதானத்துடன் உடற்பயிற்சி மையம், நீச்சல் தடாகம் உள்ளிட்டவையும் அமைக்கப்படும். இங்கு கால்பந்தாட்டம், கைப்பந்தாட்டம், கூடைப்பந்தாட்டம், றக்பி உள்ளிட்ட போட்டிகளையும் நடத்த வசதிகள் செய்யப்படும்.
வெளிநாட்டு வீரர் தங்கக் கூடிய ஹொட்டல் ஒன்றும் அமைகப்படும்” என்று பிரதி சபாநாயகர் திலங்க சுமதிபால தெரிவித்தார்

Get real time updates directly on you device, subscribe now.

You might also like