வெளிநாடுகளில் சிக்கியுள்ள இலங்கையர்களை அழைத்து வர முடியாத ஸ்ரீலங்கன் விமான சேவை நிறுவனம் வெளிநாடுகளில் சிக்கியுள்ள சீனர்களுக்காக விமான சேவைகளை நடத்தி வருவதாக மக்கள் விடுதலை முன்னணியின் அரசியல் சபை உறுப்பினர் வசந்த சமரசிங்க தெரிவித்துள்ளார்.
பிரித்தானியாவில் லண்டனில் இருந்து 218 சீனப் பிரஜைகளை ஏற்றிய யு.எல்.504 விமானம் மூலம் இலங்கைக்கு அழைத்து வந்து, அவர்களை கட்டுநாயக்கவில் இருந்து யு.எல்.866 விமான மூலம் சீனாவின் ஷெங்காய் நகருக்கு அனுப்பி வைத்துள்ளனர்.
நாட்டுக்காக வெளிநாடுகளில் உழைக்கும் தொழிலாளர்கள், வெளிநாடுகளில் பல்கலைக்கழகங்களில் பயிலும் பெருந்தொகையான மாணவர்கள் இலங்கைக்கு வர எதிர்பார்த்துள்ளனர்.
அவர்களை நாட்டுக்கு அழைத்து வர எந்த வேலைத்திட்டங்களும் இல்லாத காரணத்தினால், அவர்கள் பெரும் சிக்கலை எதிர்நோக்கி வருகின்றனர். தம்மை நாட்டுக்கு அழைத்துச் செல்லுமாறு அவர்கள் அரசாங்கத்திடம் கெஞ்சுகின்றனர். எந்த தனிமைப்படுத்தலுக்கும் தயார் எனவும் அவர்கள் கூறியுள்ளனர்.
எனினும் அவர்களுக்கு சந்தர்ப்பத்தை வழங்காத எமது தேசிய விமான சேவை இன்று மேற்கொண்ட நடவடிக்கையும் எதிர்வரும் 17 ஆம் திகதி மேற்கொள்ள உள்ள நடவடிக்கை பற்றியும் நாட்டுக்கு தெரியப்படுத்த வேண்டும்.
லண்டனில் இருந்து 218 சீனப் பிரஜைகளை இலங்கைக்கு அழைத்து வந்து அவர்களை பாதுகாப்பாக சீனாவுக்கு அனுப்பி வைத்துள்ளனர்.
எமது இலங்கையர்களை அழைத்தும் வரும் பொறுப்பை ஏற்காத நாட்டின் தேசிய விமான சேவை, லண்டனில் இருந்து இலங்கைக்கு வந்து சீனாவுக்கு செல்லும் சீனர்களை நாம் ஏன் பொறுப்பேற்க வேண்டும்? எனவும் வசந்த சமரசிங்க கேள்வி எழுப்பியுள்ளார்.






