சர்ச் வாசலில் பசியால் அழுதுகொண்டிருந்த 2 மாத ஆண் குழந்தை… குழந்தை இல்லாதவங்களுக்கு கொடுத்திடுங்க! அருகில் உருக்கமான கடிதம்

சென்னையில் தேவாலயம் முன்பு 2 மாத ஆண் குழந்தை ஒன்று துணியால் சுற்றப்பட்டு பெண் ஒருவர் விட்டுச் சென்றுள்ளார்.

சென்னை சாஸ்திரி நகர், பத்மநாபா நகர் 5வது குறுக்குத் தெருவில் உள்ள தேவாலயம் முன்பு நேற்று மாலை நிறுத்தி வைக்கப்பட்டிருந்த ஒரு காரின் முன் சக்கரத்தின் கீழ் துணியால் சுற்றப்பட்ட கைக்குழந்தை அழும் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் பொலிசாருக்கு தகவல் அளித்துள்ளனர்.

உடனடியாக குழந்தையை மீட்ட பொலிசார் பசியால் அழுது கொண்டிருந்த குழந்தையை மீட்டுள்ளனர். விசாரணையில் 2 மாத ஆண் குழந்தை என்பது தெரியவந்துள்ளது.

குழந்தை சுற்றப்பட்டிருந்த துணியில் ஒரு கடிதத்தையும் பொலிசார் மீட்டனர். அந்தக் கடிதத்தில், என்ன மன்னிச்சிடுங்க. இந்த குழந்தையை என்னால பாத்துக்க முடியல. பாத்துக்குற அளவுக்கு பணம் இல்ல. ஒரு வேளை சாப்பாட்டுக்கு கூட வேலை இல்லாம கஷ்டப்படுறேன்.

என் பிள்ளையை நல்லா பாத்துக்கங்க. என் பிள்ளைய எங்கவிட்டுட்டு போறதுன்னு தெரியாம இங்க விட்டுட்டு போறேன். பத்திரமா பாத்துக்கோங்க. மதபோதகர் கிட்ட சொல்லி குழந்தையை பத்திரமா பாத்துக்கோங்க. குழந்தை இல்லாதவங்க கிட்ட கொடுத்துடுங்க. என்ன மன்னிச்சிடுங்க என்று உருக்கமாக எழுதியுள்ளது.

பின்பு குழந்தையை மீட்டு குழந்தைகள் காப்பகத்திற்கு அனுப்பியுள்ள காவல் அதிகாரிகள் அங்கிருந்த கமெராவில் சிக்கிய காட்சியினை ஆய்வு செய்தனர். அப்பொழுது துணியால் தலையை மறைத்தபடி குழந்தையை வைத்துவிட்டுச் செல்லும் காட்சி பதிவாகியுள்ளது

குறித்த பெண் யார்? எங்கு சென்றார்? என பொலிசார் தீவிரமாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.