5000 ரூபாய் கொடுப்பனவு வழங்கும் பணிகளில் இருந்து விலகும் கிராம உத்தியோகஸ்தர்கள்

ஊரடங்குச் சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ள காரணத்தினால், தமது வாழ்வாதாரத்தை இழந்துள்ள மக்களுக்கு அரசாங்கம் வழங்கும் 5 ஆயிரம் ரூபாய் உதவியை தொகையாக வழங்கப்பட்டு வருகின்றது.

அத் தொகையைப் பகிர்ந்தளிக்கும் பணிகளில் இருந்து இன்று முதல் விலகிக்கொள்வதாகவும் அந்த நடவடிக்கைகளை கண்காணிக்கும் பணிகளில் மாத்திரம் ஈடுபட உள்ளதாக இலங்கை கிராம உத்தியோகஸ்தர்கள் சங்கத்தின் தலைவர் சுமித் கொடிக்கார தெரிவித்துள்ளார்.

5 ஆயிரம் ரூபாய் கொடுப்பனவு கிடைக்க வேண்டியவர்கள் சம்பந்தமான பெயர்ப் பட்டியலை தயாரித்து கிராம உத்தியோகஸ்தர்கள் சமர்ப்பித்துள்ளனர்.

இந்த பட்டியலை கவனத்தில் கொள்ளாது சமூர்த்தி அபிவிருத்தி அதிகாரிகள் மூலம் மீண்டும் பட்டியல் தயாரிக்கப்பட்டு, பிரதேச அரசியல் அதிகார மையத்தின் உதவியுடன் இந்த கொடுப்பனவுகள் வழங்கப்பட்டு வருவதால், தாம் இந்த பணிகளில் இருந்து விலகிக் கொள்வதாகவும் கொரோனா நிவாரண செயலணிக்குழுவின் தலைவர் பசில் ராஜபக்சவின் கோரிக்கைக்கு அமைய கண்காணிப்பு பணிகளில் மாத்திரம் ஈடுபட்டுள்ளதாகவும் கொடிக்கார குறிப்பிட்டுள்ளார்.

கொரோனா வைரஸ் பரவல் காரணமாக அமுல்படுத்தப்பட்டுள்ள ஊரடங்குச் சட்டத்தால் பாதிக்கப்பட்டுள்ள குடும்பங்களுக்கு 5 ஆயிரம் ரூபாய் உதவி தொகையை வழங்க அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது. எனினும் இந்த உதவி தொகையானது ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பிரதேச அரசியல்வாதிகளின் தலையீடு காரணமாக கட்சி சார்பானவர்களுக்கு மாத்திரம் வழங்கப்பட்டு வருவதாக எதிர்க்கட்சியினர் குற்றம் சுமத்தியுள்ளனர்.