யாழில் ஊரடங்கு சட்டம் தளர்த்தப்படக்கூடியதாக அடையாளம் காணப்பட்டுள்ள பகுதிகள் தொடர்பில் அறிவிப்பு

யாழ்ப்பாணத்தில் உடனடியாக ஊரடங்கு சட்டம் தளர்த்தப்படக்கூடிய பகுதிகளாக தீவகம், தென்மராட்சி, வடமராட்சி மற்றும் மருதங்கேணி பிரதேச செயலக பிரிவுகள் காணப்படுவதாக வட மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் மருத்துவர் ஆ.கேதீஸ்வரன் தெரிவித்துள்ளார்.

யாழ்ப்பாணத்தில் உள்ள மாகாண சுகாதார சேவைகள் பணிமனையில் இன்றைய தினம் ஊடகவியலாளர் சந்திப்பு இடம்பெற்றுள்ளது.

இதில் வைத்து கருத்து தெரிவிக்கும் போதே இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார். மேலும் கூறுகையில்,

கிளிநொச்சி, முல்லைத்தீவு, வவுனியா மற்றும் மன்னார் மாவட்டங்களில் சமூக மட்டத்தில் முதலாம் கட்ட பரிசோதனைகளை முன்னெடுத்திருந்தோம்.

எனவே எதிர்வரும் நாட்களில் அந்த மாவட்டங்களில் இரண்டாம் கட்ட பரிசோதனைகளை முன்னெடுக்கவுள்ளோம்.

அதன்போது எந்தவொரு சமூக மட்ட வைரஸ் தொற்றும் உறுதிப்படுத்தப்படாவிட்டால் அந்த 4 மாவட்டங்களிலும் ஊரடங்கு சட்டம் உள்ளிட்ட கட்டுப்பாடுகளைப் படிப்படியாக நீக்க முடியும்.

யாழ்ப்பாணம், பலாலி தனிமைப்படுத்தல் நிலையத்தில் கடந்த மார்ச் மாதம் 23ஆம் திகதி தொடக்கம் தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டிருந்த 20 பேரில் 16 பேருக்கு கோரோனா வைரஸ் தொற்று உள்ளமை உறுதி செய்யப்பட்டது.

அவர்கள் எந்தவகையிலும் சமூக மட்டத்தில் தொடர்பை வைத்திருக்கவில்லை. எனவே யாழ்ப்பாணம் மக்கள் அச்சமடையத் தேவையில்லை.

அத்துடன், யாழ்ப்பாண மாவட்டத்தில் நேற்றுவரை சுயதனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்ட 140 பேரிடம் பரிசோதனைகள் முன்னெடுக்கப்பட்டன. அவர்கள் 140 பேருக்கும் வைரஸ் தொற்று இல்லை என்றே முடிவு கிடைத்துள்ளது.

எனவே, யாழ்ப்பாணம் அரியாலையில் கடந்த மார்ச் 15ஆம் திகதி சுவிஸ் போதகர் நடத்திய ஆராதனையில் பங்குபற்றிய 320 பேருக்கும் தொடர்ந்து வரும் நாள்களில் பரிசோதனைகளை முன்னெடுக்கவுள்ளோம்.

அந்தப் பரிசோதனைகளின் முடிவில் கடும் தாக்கம் உள்ளவர்களுக்கு இரண்டாம் கட்டப் பரிசோதனைகளை முன்னெடுப்போம்.

பரிசோதனைகளின் நிறைவில் யாழ்ப்பாணம் மாவட்டத்தில் சமூக மட்ட தொற்றுக்கான அபாயம் இல்லை என்று உறுத்திப்படுத்தப்பட்ட பின்னரே ஊரடங்கு உள்ளிட்ட கட்டுப்பாடுகளைத் தளர்த்துவதற்கு பரிந்துரைகளை வழங்குவோம்.

யாழ்ப்பாணத்தில் உடனடியாக ஊரடங்குச் சட்டம் தளர்த்தப்படக்கூடிய பகுதிகளாக தீவகம், தென்மராட்சி, வடமராட்சி மற்றும் மருதங்கேணி பிரதேச செயலக பிரிவுகள் காணப்படுகின்றன.

ஊரடங்கு சட்டம் தளர்த்தப்படும் போது அந்தப் பகுதிகளே தளர்த்தப்படும்.

அதன் பின்னர், சுவிஸ் போதகரின் வழிபாட்டில் பங்கேற்றவர்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ள நல்லூர், யாழ்ப்பாணம், உடுவில், சண்டிலிப்பாய் சுகாதார சேவைகள் பிரிவுகள் தவிர்ந்த யாழ்ப்பாணத்தின் ஏனைய பகுதிகளில் தளர்த்தப்படும்.

நான்கு பிரிவுகளிலும் தொற்று இல்லை என்பது உறுதிப்படுத்தப்பட்டால் பின்னர் அந்தப் பகுதிகளுக்கும் ஊரடங்கு தளர்த்தப்படும் என குறிப்பிட்டுள்ளார்.