யாழில் உள்ளூர் வெங்காயத்திற்குத் திடீர் தட்டுப்பாடு! (Video)

யாழ். குடாநாட்டில் உள்ளூர் வெங்காயத்திற்குத் திடீர்த் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக நுகர்வோர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
குடாநாட்டில் வலிகாமம் பிரதேசத்தில் பல ஏக்கர் நிலப்பரப்பில் பெரும்போக வெங்காயச் செய்கை மேற்கொள்ளப்பட்டுள்ள நிலையில் அவை ஒருவித நோய்த் தாக்கத்திற்கு உள்ளாகியுள்ளது. இதன் காரணமாக உள்ளூர் வெங்காயத்தின் வரத்து குடாநாட்டுச் சந்தைகளில் வெகுவாகக் குறைவடைந்துள்ளது.

யாழ்.குடாநாட்டின் முக்கிய சந்தையான திருநெல்வேலிப் பொதுச் சந்தையில் இன்றைய தினம்(25) ஒரு கிலோ உள்ளூர் வெங்காயம் 200 ரூபாவாக விற்பனை செய்யப்பட்டது.

தென்னிலங்கையின் முக்கிய பொருளாதாரச் சந்தையான தம்புள்ளப் பொதுச் சந்தையிலிருந்து இந்தியன் வெங்காயம் யாழ்.குடாநாட்டிற்கு இறக்குமதி செய்யப்படுகின்ற போதும் குடாநாட்டு வெங்காயத்துக்கே தொடர்ந்தும் நுகர்வோர் மத்தியில் மவுசு காணப்படுகின்றது.

உள்ளூர் வெங்காயத்திற்குப் பதிலாக இந்தியன் வெங்காயத்தை வியாபாரிகள் அதிகளவில் தற்போது கொள்வனவு செய்து விற்பனை செய்து வருகின்ற போதும் தட்டுப்பாடான நிலையிலுள்ள உள்ளூர் வெங்காயத்தைத் தேடிக் கொள்வனவு செய்வதிலேயே நுகர்வோர் அதிக ஆர்வம் காட்டுவதாக வியாபாரிகள் தரப்பில் தெரிவிக்கப்படுகிறது.

குடாநாட்டில் பயிரிடப்பட்டுள்ள வெங்காயச் செய்கையின் அறுவடையில் பெரும்பாலான விவசாயிகள் அடுத்தமாத முற்பகுதியளவில் ஆர்வம் காட்டுவர் என எதிர்பார்ப்பதால் உள்ளூர் வெங்காயத்துக்கான தட்டுப்பாடு எதிர்வரும் இரு வாரங்களுக்குள் நீங்குமெனவும் வெங்காய வியாபாரிகள் நம்பிக்கை வெளியிட்டுள்ளனர்.

Get real time updates directly on you device, subscribe now.

You might also like