சமுர்த்தி கொடுப்பனவில் ஏற்பட்ட வாக்குவாதம்: யாழில் நஞ்சு அருந்தி உயிரை மாய்க்க முயற்சித்த குடும்ப பெண்

கிராம மக்களுக்கு உதவிப்பொருள்கள் வழங்கும் திட்டத்தில் சமுர்த்தி உத்தியோகத்தர் பாரபட்சம் காட்டியதாக எழுந்த முரண்பாட்டையடுத்து 25 வயதுடைய இளம் குடும்பப் பெண் ஒருவர் நஞ்சு அருந்தி உயிரை மாய்க்க முயற்சித்துள்ளார்.

நஞ்சு அருந்திய அவரை உறவினர்கள் உடனடியாக அழைத்துச் சென்று சாவகச்சேரி வைத்தியசாலையில் அனுமதித்தனர்.

இந்தச் சம்பவம் கொடிகாமம் பலாவி பகுதியில் இன்று (ஏப்ரல் 17) வெள்ளிக்கிழமை இடம்பெற்றது.

இந்தச் சம்பவம் தொடர்பில் கொடிகாமம் பொலிஸார் தெரிவித்ததாவது;

தென்மராட்சி பாலாவி பகுதியில் சமுர்த்தி உத்தியோகத்தர்கள் ஊடாக உதவிப்பொருள்கள் வழங்கும் செயற்பாடு நேற்று முன்னெடுக்கப்பட்டது.

இதன்போது இரண்டு குடும்பங்களுக்கு உதவிப்பொருள்களை வழங்க சமுர்த்தி உத்தியோகத்தர் மறுத்துள்ளார். புதிய பதிவுடைய குடும்பங்களுக்கு தற்போது வழங்க முடியாது. ஏனையோருக்கு வழங்கப்பட்ட பின்னரே புதிய பதிவுடையவர்களுக்கு வழங்குவது தொடர்பில் தீர்மானிக்க முடியும் என்றும் சமுர்த்தி உத்தியோகத்தர் தெரிவித்துள்ளார்.

இதனால் உதவிப்பொருள்கள் வழங்கப்படாத இரண்டு குடும்பங்களைச் சேர்ந்த பெண்கள், சமுர்த்தி உத்தியோகத்தருடன் முரண்பட்டதுடன் தாக்குதல் நடத்தவும் முற்பட்டுள்ளனர்.

சம்பவம் தொடர்பில் கொடிகாமம் பொலிஸாருக்கு சமுர்த்தி உத்தியோகத்தரால் முறைப்பாடு வழங்கப்பட்டது. எனினும் தற்போதைய சூழ்நிலையைக் கருத்திற்கொண்டு இரு தரப்பினரையும் அழைத்து இணக்கமாகச் செல்லுமாறு பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரியால் அறிவுறுத்தப்பட்டு, அனுப்பிவைக்கப்பட்டனர்.

எனினும் இன்று வெள்ளிக்கிழமை சமுர்த்தி உத்தியோகத்தர் அந்தப் பகுதிக்குச் சென்று மீளவும் இந்தப் பிரச்சினையை வைத்து, அந்தப் பகுதியைச் சேர்ந்த சமுர்த்தி பயனாளிகளையும் அழைத்து தன்னுடன் முரண்பட்டவர்களை கைது செய்து நீதிமன்றில் முற்படுத்துமாறு கேட்டுக்கொண்டார்.

சம்பவம் இடத்துக்குச் சென்ற பொலிஸார், தற்போதைய சூழ்நிலையில் மக்களை ஒன்றுகூட்ட வேண்டாம் என்று சமுர்த்தி உத்தியோகத்தரைக் கேட்டுக்கொண்டனர்.

எனினும் அவர் உடன்பட மறுத்தார். இதற்கு இடையில் சமுர்த்தி உத்தியோகத்தர் தனக்கு அவமானத்தை ஏற்படுத்துகிறார் என்று குற்றஞ்சாட்டிய 25 வயதுடைய குடும்பப் பெண் நஞ்சு அருந்தி உயிரை மாய்க்க முற்பட்டார்.

அவரை உறவினர்கள் உடனடியாக அழைத்துச் சென்று சாவகச்சேரி வைத்தியசாலையில் அனுமதித்தனர் என்று பொலிஸார் தெரிவித்தனர்.

தற்கால நிலமையில் உதவிப்பொருள்கள் வழங்கப்படும் போது அனைவருக்கு அவை சென்றடைய வேண்டும். அதுதொடர்பில் அதிகாரிகள் கவனம் செலுத்தவேண்டும் என்பது அனைவரது எதிர்பார்ப்பாகும்.